ஹெராயின் போதை வஸ்துக்கு அடிமைப்படுவது வருத்தகரமானது, துயர்தரக்கூடியது. ஹெராயினின் அளவுக்கேற்ப உடலும் பழகிவிடுவதால், அதேயளவு போதை கிடைப்பதற்கு ஹெராயினின் அளவை அதிகரிக்கவேண்டிய அவசியம் உண்டாகிவிடுகிறது. ஓரளவுக்கு மேல் அதிகமாக உட்கொள்ளும்போது, அது உயிரைப் பறித்துவிடுகிறது. அளவுக்கதிகமாக ஹெராயின் உட்கொண்டு யாராவது மரித்துவிட்டதாக ஹெராயின் அடிமைகள் கேள்விப்படும்போது, உடனே அவர்களுக்கு பயம் உண்டாவதில்லை; மாறாக “அது எங்கே கிடைக்கிறது?” என்று விசாரிப்பார்கள்.
இந்தக் கீழ்த்தரமான போக்குபற்றி ஸ்குரூடேப் லெட்டர்ஸ் எனும் புத்தகத்தில் சி.எஸ்.லூயிஸ் எச்சரித்திருக் கிறார். பாவச்சோதனையை சாமர்த்தியமாகக் கொடுப்பது எப்படியென ஒரு பிசாசு விளக்கம் கொடுப்பதுபோல அந்தப் புத்தகத்தில் கற்பனைசெய்து எழுதியிருப்பார். இன்பம் தருகிற ஏதாவது விஷயத்தில் முதலில் ஈடுபட வேண்டும், தேவன் அனுமதித்திருக்கிற நல்ல இன்பங்களாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் தேவன் தடைசெய்திருக்கும் விதத்தில் அதை அனுபவிக்கும்படித் தூண்டவேண்டும். தூண்டுதலுக்கு மனிதன் இணங்கினதுமே, அந்த இன்பம் அவனுக்குக் கிடைக்காமல் செய்து, அதற்காக அவன் அதிகம் ஏங்கும்படி அவனை வசியப்படுத்தவேண்டும். “அந்த இன்பத்தை கொஞ்சம்கொஞ்சமாகக் குறைத்து, அதைப் பெறுவதற்கான ஆசையை அதிகரித்துக் கொண்டே இருக்கவேண்டும். இறுதியில், “அந்த மனிதனின் ஆத்துமாவைச் சிறைப்படுத்தி, அவனுக்கு எதுவுமே கிடைக்காமல் செய்யவேண்டும்” என்று அந்தப் பிசாசு சொல்லுவதாக எழுதியிருப்பார்.
இந்த நாசகரமான சுழற்சியை பாலின்ப பாவச்சோதனையை வைத்து நீதிமொழிகள் 7 விவரிக்கிறது. பாலுணர்வு என்பது தேவன் தந்திருக்கிற நல்லதொரு ஈவு. ஆனால் பாலுணர்வு நுகர்வை திருமண பந்தத்திற்கு வெளியே அனுபவிக்க முயலும்போது, ‘ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வது’ போலாகும்
(வச. 22). நம்மைவிட பலசாலிகளான மனிதர்கள் எல்லாம் தீங்கான விஷயங்களை அனுபவிக்க முயன்று, தங்களையே அழித்திருக்கிறார்கள். எனவே, “செவிகொடுங்கள்,” “உன் இருதயம் (தவறான) வழியிலே சாயவேண்டாம்” (வச. 24-25). பாவம் நம்மை மயக்கலாம், அடிமைப்படுத்தலாம், ஆனால் எப்படியானாலும் முடிவு மரணம்தான். வசனம் 27. தேவனுடைய பெலத்தால், பாவச்சோதனையை மேற்கொள்ளும்போது, அவருக்குள் மெய்யான சந்தோஷத்தையும் மனதிருப்தியையும் பெற்றுக்கொள்ளலாம்.
பரிசுத்த ஆவியானவரே, பாவச்சோதனையை மேற்கொள்வதற்கு இயல்பிலேயே நான் பெலனற்றவன். எனக்கு நீர் வேண்டும். எனக்கு உதவிசெய்யும்.
எப்போது, எங்கு நீங்கள் பாவச்சோதனைகளைச் சந்திக்கிறீர்கள்? அவற்றை விட்டு தூர ஓடுவதற்கு எவ்வாறு தேவனுடைய ஞானத்தையும் உதவியையும் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம்?