இங்கிலாந்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் வில்லியம் கேரி. பின்னாளில் அவர் என்ன சாதிக்கப்போகிறார் என்று அவர் காலத்தில் (1761-1834), அவருடைய கிராமத்தில் வாழ்ந்த யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் நவீனக்கால ஊழியப் பணிகளின் தந்தை என்று அவர் இன்று அழைக்கப்படுகிறார். அவருடைய பெற்றோர் நெசவு தொழிலாளர்கள். வில்லியம் கேரியும்கூட ஆசிரியராகவும், செருப்புத் தைப்பவராகவும் வேலை செய்தார்; ஆனால் அதில் அவர் பெரிதாக ஜொலிக்கவில்லை. கிரேக்கம், எபிரெயம், லத்தீன் போன்ற மொழிகளைக் கற்றுக் கொண்டார். இந்தியாவில் நற்செய்தியை அறிவிக்கவேண்டும் என்பது அவருடைய கனவு. பல வருடங்களுக்கு பிறகு அந்தக் கனவு நிஜமாகியது. ஆனால் அவர் பட்ட கஷ்டங்கள் கொஞ்சமல்ல. அவருடைய குழந்தை மரித்துப்போனது, மனைவி மனநோய்க்கு ஆளானார், அவர் யார் மத்தியில் ஊழியம் செய்தாரோ அவர்களிலும்கூட பல வருடங்களாக எந்த மாற்றமுமே காணப்படவில்லை.

ஆனாலும் அவர் முழு வேதாகமத்தையும் ஆறு மொழிகளில் மொழிபெயர்த்திருக்கிறார்; வேதாகமத்தின் சில பகுதிகளை இருபத்தொன்பது மொழிகளில் மொழிபெயர்த்திருக்கிறார். பல கஷ்டங்களின் மத்தியிலும் அவரால் எவ்வாறு தொடர்ந்து சேவைபுரிய முடிந்தது? “என்னால் கடுமையாகப் பிரயாசப்படமுடியும். குறிப்பிட்ட இலக்கை அடைய என்னால் விடாமல் முயற்சிசெய்யமுடியும்” என்று அவர் சொன்னார். என்னென்ன சோதனைகள் வந்தாலும் தேவனுக்குச் சேவைசெய்ய தன்னை அர்ப்பணித்திருந்தார்.

இவ்வாறு கிறிஸ்துவுக்கு நம்மை தொடர்ந்து அர்ப்பணிக்க வேண்டியது அவசியமென எபிரெயருக்கு எழுதும்போது பவுல் ஆலோசனை கூறுகிறார். தேவனைக் கனப்படுத்த விரும்பினால் ‘அசதியாயிராமல்’ (எபி. 6:11) “முடிவுபரியந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்க வேண்டுமென்று” தன் வாசகர்களுக்கு அறிவுறுத்துகிறார் (வச. 12).

தேவன் தன்னுடைய தேவைகளை எல்லாம் சந்தித்து வந்ததாக பின்னான வருடங்களில் வில்லியம் கேரி சொன்னார். “தேவன் தம்முடைய வாக்குத்தத்தங்களை ஒரு நாளும் நிறைவேற்றத் தவறவில்லை; எனவே அவருடைய பணியை நானும் செய்யாமல் இருக்கமுடியாது” என்று சொன்னார். நாமும்கூட ஒவ்வொரு நாளும் தேவனுக்காகச் சேவைசெய்யும்படி அவர் தாமே நம்மைப் பெலப்படுத்துவாராக.