பிரேசிலைச் சேர்ந்த மேலாளர் ஒருவர், தனக்குக் கீழ் வேலைசெய்த கண்காணிப்பாளர்களிடம், அறிக்கை ஒன்றை தன்னிடம் சமர்ப்பிக்கும்படிச் சொன்னார். ஒவ்வொரு அறையையும் சுத்தம் செய்வது யார், எந்தெந்த அறைகளெல்லாம் சுத்தம்செய்யாமல் இருக்கின்றன, ஒவ்வொரு அறையையும் சுத்தம்செய்ய பணியாட்கள் எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறார்கள் போன்ற விபரங்களை தினமும் பதிவுசெய்து, மேலாளருக்கு அவர்கள் அனுப்பவேண்டும். முதல் “தின” அறிக்கையானது ஒரு வாரம் கழித்து மேலாளரின் கைக்கு வந்தது; ஆனால் அரைகுறை விபரங்களோடு அறிக்கை இருந்தது.
காரணம் என்னவென்று விசாரித்தபோது, சுத்தம்செய்கிற பணியாட்கள் பலருக்கு எழுதப்படிக்கத் தெரியாது என்கிற உண்மை மேலாளருக்குத் தெரியவந்தது. அந்தப் பணியாட்களை அவர் பணிநீக்கம் செய்திருக்கலாம்; அதற்கு பதிலாக, அவர்கள் எழுதப்படிக்க கற்றுக்கொள்வதற்கான வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்தார். ஐந்தே மாதங்களுக்குள் அந்தப் பணியாட்கள் அனைவருமே அடிப்படை அளவில் எழுதப்படிக்கக் கற்றுக் கொண்டார்கள். தொடர்ந்து அந்த நிறுவனத்தில் அவர்கள் வேலைசெய்ய முடிந்தது.
தேவனும்கூட நாம் அவர் பணியை தொடர்ந்து செய்ய நம்மைப் பயிற்றுவிக்கும்படி நம்முடைய போராட்டங்களை வாய்ப்புகளாக மாற்றுகிறார். அனுபவமற்ற பேதுருவின் வாழ்க்கையிலும்தான் எத்தனை தவறுகள்! தண்ணீரின்மேல் நடந்தபோது விசுவாசத்தில் தடுமாறினார். தேவாலய வரிப்பணத்தை இயேசு செலுத்தவேண்டுமா, வேண்டாமா என்று தெரியாமல் குழம்பினார் (மத். 17:24-27). தம்முடைய சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் குறித்து இயேசு தீர்க்கதரிசனமாகச் சொன்னபோது, பேதுரு அதற்கு குறுக்கே நின்றார் (மத். 16:21-23). அந்த ஒவ்வொரு சூழ்நிலையிலும், தாம் வேறு யாருமல்ல, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட மேசியா என்பதை பேதுருவுக்குக் கற்றுக்கொடுத்தார் (வச. 16). பேதுருவும் தான் கற்கவேண்டிய விஷயங்களுக்குச் செவிகொடுத்து, அவற்றை அறிந்துகொண்டார். அதனால்தான் ஆதிகால சபையை அவர் நிறுவமுடிந்தது (வச. 18).
ஏதாவது தோல்வியால் இன்று நீங்கள் துவண்டுபோயிருந்தால், தேவ பணியை நீங்கள் தொடர்ந்துசெய்யும்படி அந்த அனுபவத்தின்மூலம் இயேசு உங்களுக்குப் போதித்து, வழிநடத்தமுடியும். பேதுருவிடம் குற்றங்குறைகள் இருந்தபோதிலும், அவரோடு தேவன் தொடர்ந்து செயல்பட்டார். தேவனுடைய ராஜ்யம் கட்டுப்படும்படி அவருடைய வருகைமட்டும் நம்மூலமாகவும் அவர் செயல்படமுடியும்.
ஆண்டவரே, என்னுடைய எந்த அனுபவத்தைப் பயன்படுத்தியும் நீர் யார் என்பதை எனக்குப் போதிக்கமுடியுமென நம்புகிறேன். என்னுடைய தோல்விகளை எடுத்து, உம்முடைய மகிமைக்காகப் பயன்படுத்தும்.
தேவனுடைய பணியைச் செய்யும்படி உங்களைப் பயிற்றுவிக்கவும், வழிநடத்தவும் உங்களுடைய வாழ்க்கையின் சவால்களை தேவன் எவ்வாறு பயன்படுத்தியிருக்கிறார்? உங்களுடைய எந்த கடந்தகால தோல்வியை நீங்கள் தேவனிடம் அர்ப்பணிக்கவேண்டியுள்ளது?