இன்று நம் உலகம் இருக்கிற நிலையை விவாகரத்து மிகச்சரியாக எடுத்துக்காட்டுவதாக லுக் அன்ட் ஸீ: எ போர்ட்ரைட் ஆஃப் வென்டல் பெரி என்கிற ஆவணப்படத்தில், அதன் ஆசிரியரான பெரி வலியுறுத்துகிறார். நாம் மற்றவர்களிடமிருந்தும், நம் வரலாற்றிடமிருந்தும், நம் தேசத்திடமிருந்தும் விவாகரத்தான நிலையில்தான் இருக்கிறோம். ஒன்று சேர்ந்து இருக்கவேண்டியவை பிரிந்து நிற்கின்றன. இந்த மோசமான உண்மையைச் சரிசெய்வதற்கு என்ன செய்யலாம் என்று பெரியிடம் கேட்டபோது, “எல்லாவற்றையும் மீண்டும் ஒன்றுசேர்த்துவிட முடியாது. இரண்டு விஷயங்களை எடுத்து, அவற்றைச் சேர்க்கலாம்” என்று சொன்னார். பிரிந்துகிடக்கிற இரண்டு விஷயங்களை எடுத்து, அவற்றை மீண்டும் ஒன்றாகச் சேர்க்கலாம்.
“சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்” என்று இயேசு சொல்கிறார் (மத். 5:9). சமாதானத்தைக் கொண்டுவருவதுதான் ஷலோம். உலகத்தை மீண்டும் சரிசெய்கிற ஒரு நிலையை ஷலோம் சுட்டிக்காட்டுகிறது. ஷலோம் என்றால், “இப்பிரபஞ்சம் செழித்து, ஒன்றுபட்டு, மகிழ்ச்சி
நிறைந்திருப்பதாகும்… அப்படித்தான் எல்லாமே இருக்கவேண்டும்” என்று இறையியல் வல்லுனர் ஒருவர் கூறுகிறார். உடைந்துபோன ஒன்றை எடுத்து, மீண்டும் சரிபடுத்துவதுதான் ஷலோம். இயேசு வழிகாட்டுவதுபோல, காரியங்களைச் சரிசெய்வதற்கு நாம் பிரயாசப்படுவோம். நாம் சமாதானம் பண்ணுகிறவர்களாக இருக்கவும், “பூமிக்கு உப்பாக” இருக்கவும், “உலகத்திற்கு வெளிச்சமாக” இருக்கவும் அவர் நம்மை அழைக்கிறார் (வச. 13-14).
உலகத்தில் சமாதானம் பண்ணுகிறவர்களாக விளங்குவதற்கு அநேக வழிகள் உள்ளன. எந்த வழியாக இருந்தாலும் பிரிவை வெல்லுபவர்களாக இருக்கவேண்டுமே தவிர, பிரிவை உண்டாக்குபவர்களாக இருந்துவிடக்கூடாது. நட்பு முறிந்துபோகவோ, வாழ்வதற்கே திண்டாடிவரும் அக்கம்பக்கத்தார் ஒருவர் முடங்கிப்போவதற்கோ, தைரியமிழப்பதற்கோ தனிமைப்படுவதற்கோ விடமாட்டேன் என்று தேவனுடைய வல்லமையால் நாம் தீர்மானம் எடுக்கவேண்டும். எங்கெல்லாம் பிரிவு நுழைந்திருக்கிறதெனப் பார்ப்போம், பிரிவை அகற்றி மீண்டும் சரிசெய்வதற்கு தேவன் ஞானத்தைத் தருவாரென்கிற நம்பிக்கையோடு அதைச் சரிசெய்ய முயல்வோம்.
தேவனே உடைந்துபோன நிலையில் காணப்படும் விஷயங்கள் என்னைச் சுற்றிலும் ஏராளம் உள்ளன. அவற்றைச் சரிசெய்வதற்கு எவ்வாறு துவங்கவேண்டுமென எனக்குத் தெரியவில்லை. எவ்வாறு ஆரம்பிக்க வேண்டுமென எனக்குக் காட்டுவீரா?
உங்களுக்குத் தெரிந்து, மீண்டும் ஒன்றுசேர்க்கும்படி பிரிந்து நிற்கிற இரண்டு விஷயங்கள் உள்ளனவா? அவற்றை இணைத்து இசைவைக் கொண்டுவருவதற்கு தேவன் உங்களை அழைப்பதை உணரமுடிகிறதா?