1948ம் வருடம், ஒருநாள் காலை வேளையில் வீட்டின் அழைப்புமணி ஒலிக்கவே, கதவைத் திறந்த ஹரலன் பாபோவ் என்பவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தன் வாழ்க்கை ஓட்டம் மாறப்போவதை அப்போது அவர் உணர்ந்திருக்கவில்லை. ஏனென்றால் அங்கு வந்திருந்தது பல்கேரிய காவலர்கள். ஹரலனுடைய விசுவாசத்தின் நிமித்தம் அவரைக் கைதுசெய்து, சிறையில் அடைத்தார்கள். அதன்பிறகு பதின்மூன்று வருடங்கள் சிறையில் கழித்தார், தனக்கு பெலத்தையும் தைரியத்தையும் தரும்படி தேவனிடம் ஜெபித்துக்கொண்டே இருந்தார். சிறையில் கொடுமை அனுபவித்தார். ஆனாலும் தேவன் தன்னோடு இருக்கிறார் என்கிற நிச்சயம் இருந்தது. இயேசுவைப் பற்றிய நற்செய்தியை சகக்கைதிகளிடம் பகிர்ந்துகொண்டார். அநேகர் விசுவாசித்தார்கள்.
இதே கதைதான் யோசேப்புக்கும். கோபங்கொண்ட தன் சகோதரர்கள் கொஞ்சமும் இரக்கமின்றி தன்னை எகிப்துக்குச் சென்றுகொண்டிருந்த வியாபாரிகளிடம் விற்றபோது, தன் வாழ்க்கை ஓட்டம் எப்படி இருக்குமென அவருக்கும் தெரியவில்லை. அந்த வியாபாரிகள் யோசேப்பை போத்திபார் என்கிற ஓர் எகிப்திய அதிகாரியிடம் விற்றார்கள். பலதெய்வ நம்பிக்கையுடைய மக்கள் வாழ்ந்துவந்த ஒரு கலாச்சாரத்தில் வாழவேண்டியதாயிற்று. போதாக் குறைக்கு, போத்திபாரின் மனைவி யோசேப்பை மயக்கப் பார்க்கிறாள். எவ்வளவோ முயன்றும் யோசேப்பு இடம் கொடுக்கவே இல்லை. உடனே பொய்க்குற்றச்சாட்டைச் சுமத்துகிறாள். அதனால் சிறையில் அடைக்கப்படுகிறார் யோசேப்பு. ஆதியாகமம் 39:16-20. ஆனாலும் தேவன் அவரைக் கைவிடவில்லை. யோசேப்போடே தேவன் இருந்தார். அதுமட்டுமல்ல, “அவன் செய்கிற யாவையும் கர்த்தர் வாய்க்கப் பண்ணி(னார்).” மேலும், அதிகாரிகளின் “தயவு கிடைக்கும்படி செய்தார்” (39:3,21).
யோசேப்பு எவ்வளவு பயத்தில் இருந்திருப்பார் என்று சொல்லவேண்டியதில்லை! ஆனாலும் உண்மையோடிருந்தார், ஒழுக்கம் தவறவில்லை. அந்த இக்கட்டான பயணத்தில் யோசேப்போடே தேவன் இருந்தார், யோசேப்புக்கு ஒரு மகத்தான திட்டத்தையும் வைத்திருந்தார். உங்களைக் குறித்தும் அவருக்கு ஒரு திட்டம் உண்டு. தைரியமாக இருங்கள், விசுவாசத்தோடு நடந்துகொள்ளுங்கள், எல்லாவற்றையும் அவர் பார்த்துக் கொண்டிருக்கிறார், எல்லாம் அவருக்குத் தெரியும் என்று நம்புங்கள்.
ஆண்டவரே, எனக்கு அசெளகரியத்தையும் அல்லது வேதனையையும் உண்டுபண்ணுகிற வாழ்க்கை சூழ்நிலைகளிலும் நீர் எப்போதும் என்னோடுகூட இருப்பதற்காக நன்றி. நான் உமக்கு உண்மையாக வாழ்வதற்கு எனக்கு உதவிசெய்யும்.
சமீபத்தில் நீங்கள் சந்தித்த இக்கட்டான சூழ்நிலை என்ன? ஒருவேளை உங்கள்மேல் பொய்க்குற்றச்சாட்டுகூட எழுந்திருக்கலாம்! அப்படிப்பட்ட நேரங்களில் ஒழுக்கத்தில் தவறாமல் இருக்கவேண்டியது ஏன் முக்கியமானதாகும்?