டெனிஸ் என்கிற இளம்பெண், தன் ஆண் நண்பனுடன் பழகத்  துவங்கிய சமயத்தில் தன்னை ஒல்லியாகவைக்கவும், ஸ்டைலாக உடையணியவும் அதிக சிரத்தை எடுத்துக்கொள்வாள். அப்போதுதான் அவனுக்கு தன்னை அதிகமாகப் பிடிக்குமென நினைத்தாள். அப்படித்தானே மகளிர் பத்திரிகைகளும் விளம்பரப்படுத்துகின்றன. ஆனால் உண்மையில் அவன் என்ன நினைத்தான் என்பதை பின்னர்தான் அவள் கண்டுபிடித்தாள். அதாவது, “நீ ஒல்லியாக இல்லாமல், உடைகளில் அதிக கவனம் செலுத்தாமல் இருந்த நாட்களிலும்கூட உன்னை எனக்கு அதிகமாகப் பிடித்திருந்தது” என்று சொன்னான்.

அழகு என்பது “மனதுசார்ந்த” ஒன்று என்பதை டெனிஸ் அப்போது உணர்ந்தாள். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை வைத்துதான் பெரும்பாலும் அழகை மதிப்பிடுகிறோம். வெளிப்புற அழகுக்கு முக்கியத்துவம் கொடுத்து, உள்ளான அழகின் முக்கியத்துவத்தை மறந்துவிடுகிறோம். ஆனால் தேவன் எப்போதும் நம்மை தம்முடைய அழகான, பிரியமான பிள்ளைகளாகவே பார்க்கிறார். தேவன் இந்த உலகத்தைச் சிருஷ்டித்தபோது, அற்புதமான ஒன்றை இறுதியில் படைத்தார். அது வேறு எதுவுமல்ல, நாம்தான். அவர் சிருஷ்டித்த எல்லாமே நன்றாயிருந்தன, ஆனால் நம்மை தம்முடைய சாயலில் சிருஷ்டித்தார், அதுதான் கூடுதல் சிறப்பு (ஆதி. 1:27).

 தேவன் நம்மை அழகானவர்களாகப் பார்க்கிறார்! இயற்கையின் மகத்துவங்களை மனிதர்களோடு ஒப்பிடும்போது சங்கீதக்காரனால் பிரமிக்காமல் இருக்கமுடியவில்லை. “மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்” என்று கேட்கிறார் (சங். 8:4). ஆனாலும் மற்ற அனைத்தையும்விட நமக்கே அதிக மகிமையையும் கனத்தையும் கொடுக்க தேவன் தீர்மானித்தார் (வச. 5.).

இந்த உண்மையை உணரும்போது தேவனை ஏன் துதிக்கவேண்டும் என்று புரிகிறது, ஒரு நிச்சயம் கிடைக்கிறது (வச. 9). மற்றவர்கள் நம்மைப்பற்றி என்னவும் நினைக்கட்டும், ஏன் நாமும்கூட நம்மைப்பற்றி எதுவேண்டுமானாலும்  நினைக்கலாம், ஆனால் ஒன்றை மட்டும் மறவாதிருங்கள்; நாம் தேவனுக்கு அழகானவர்கள்.