இங்கிலாந்தில் கால்பந்து விளையாட்டின்போது சுவாரஸ்யமான ஒரு விஷயத்தைக் காணமுடியும். அதாவது ஒவ்வொரு ஆட்டம் தொடங்குவதற்கு முன்னரும் ரசிகர்கள் தங்கள் அணியின் கீதத்தைப் பாடுவார்கள். வேடிக்கையான பாடல் (“கிளேட் ஆல் ஓவர்”), விசித்திரமான பாடல் (ஐம் ஃபாரெவர் புளோயிங் பப்ள்ஸ்”), ஆச்சரியப் பாடல் என அணிக்கு அணிக்கு அந்தக் கீதம் மாறுபடும். உதாரணமாக, வெஸ்ட் புரோம்விச் அல்பியான் அணியின் கீதமாக “சங்கீதம் 23” உள்ளது. அந்த அணி மைதானத்தின் முகப்பில் அந்தச் சங்கீகத்தின் வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளன. “வெஸ்ட் புரோம் பேகீஸ்” அணியின் ஆட்டத்தைக் காணச் செல்கிற ஒவ்வொருவருக்கும் அந்த நல்ல, மகத்தான, பிரதான மேய்ப்பனின் அக்கறையை அந்த வார்த்தைகள் பறைசாற்றுகின்றன.
சங்கீதம் 23, “கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்” என்று தாவீது சொல்லியிருக்கும் வார்த்தைகள் காலத்தால் அழியாதவை (வச. 1). பிறகு வந்த நற்செய்தி எழுத்தாளரான மத்தேயு, “அவர், திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறடிக்கப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி(னார்)” என்று எழுதினார் (மத். 9:36). யோவான் 10 தம் காலத்தில் வாழ்ந்த “ஆடுகளாகிய” மக்கள்மேல் தமக்குள்ள அன்பையும் அக்கறையையும் இயேசு சொல்கிறார். “நானே நல்ல மேய்ப்பன்: நல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்” என்று சொன்னார் (வச. 11). இயேசு திரளான ஜனங்களோடு இடைபட்டதற்கும், அவர்களுடைய தேவைகளைச் சந்தித்ததற்கும், இறுதியில் அவர்களுக்காக (நமக்காக) தம் ஜீவனைக் கொடுத்ததற்கும் இயேசுவின் மனதுருக்கம்தான் காரணமாக இருந்தது.
“கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்” என்பது வெறும் பழங்கால பாடலோ, அறிவுப்பூர்வமான ஒரு முழக்கமோ அல்ல. தேவனை அறிந்து, அவருடைய அன்புக்கு பாத்திரமாகி, அவருடைய குமாரனால் மீட்கப்பட்டிருக்கிற ஒருவர், நம்பிக்கையோடு சொல்கிற வார்த்தைகளாகும்.
பிதாவே, எங்களுடைய மேய்ப்பனானவர் எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசாக இருக்கிறார்! அவருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, உம்மிடம் நாங்கள் நெருங்கி சேருவதற்கு எங்களுக்கு உதவிசெய்யும்.
கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார் என்பதின் அர்த்தம்பற்றி discoveryseries.org/hp952 என்கிற விலாசத்தில் அதிகமாக அறிந்துகொள்ளலாம்.
உங்கள் மேல் தேவன் வைத்திருக்கிற அக்கறையை என்னென்ன விதங்களில் கண்டிருக்கிறீர்கள்? அவரைப் பற்றி இன்று யாரிடம் சொல்லப்போகிறீர்கள்?