1960 களில் இங்கிலாந்து அரசின் பராமரிப்பில் வளர்ந்தாள் பார்பரா. அவளுக்கு பதினாறு வயதானபோது, அவளும் அவளுடைய பச்சிளங்குழந்தை சைமனும் தங்குவதற்கு வீடின்றி தவித்தார்கள். ஏனென்றால், பதினாறு வயதாகிவிட்டால் அரசாங்க பராமரிப்பு தானாகவே நின்றுவிடும். எனவே தனக்கு உதவும்படி இங்கிலாந்தின் மகா ராணிக்கு பார்பரா ஒரு கடிதம் எழுதினாள்; ராணியிடமிருந்து பதிலும் வந்தது. தன்னுடைய வீடு ஒன்றை பார்பரா தங்கும்படி கொடுத்து, மனதுருக்கத்துடன் ராணி நடந்துகொண்டார்.
பார்பராவுக்கு எது தேவைப்பட்டதோ அதற்கான வசதிவாய்ப்புகள் இங்கிலாந்தின் மகாராணியிடம் இருந்தன. மனதுருக்கத்துடன் அவர் செய்த உதவியானது தேவனுடைய மனதுருக்கத்தை சிறிதளவில் பிரதிபலிக்கிறது. பரலோக ராஜாவுக்கு நம் தேவைகள் எல்லாமே தெரியும். நம்முடைய வாழ்க்கையில் தம்முடைய திட்டங்களைச் செயல்படுத்தும்படி அவர் செயல்படுகிறார். ஆனால் அவ்வாறு செயல்படுவதற்கு முதலில் நாம் அவரிடம் வரவேண்டுமென விரும்புகிறார். அவரோடு நாம் உறவுவைக்கவேண்டும், அந்த உறவின் விளைவாக நம் தேவைகளையும் கவலைகளையும் அவரிடம் சொல்லவேண்டும்.
இஸ்ரவேலருக்கு விடுதலை தேவைப்பட்டது. அதை அவர்கள் அவரிடம் சொன்னார்கள். எகிப்தின் அடிமைத்தனத்தில் உபத்திரவப்பட்ட அவர்கள், உதவிவேண்டி கதறினார்கள். அவர்களுடைய கதறலை தேவன் கேட்டார், தாம் அவர்களுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதியை நினைவுகூர்ந்தார்: “தேவன் இஸ்ரவேல் புத்திரரைக் கண்ணோக்கினார்; தேவன் அவர்களை நினைத்தருளினார்” (யாத். 2:25). தம் மக்களை விடுவிக்கும்படிக்கு மோசேக்கு அவர் கட்டளையிட்டார்; தாம் அவர்களை மீண்டுமொருமுறை “பாலும் தேனும் ஓடுகிற நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டுபோய்ச்” சேர்ப்பதாகச் சொன்னார் (யாத். 3:8).
நாம் தம்மிடம் வரவேண்டும் என்று நம்முடைய ராஜா விரும்புகிறார்! நாம் விரும்புவதை எல்லாம் அவர் தராமல் இருக்கலாம், ஆனால் நம்முடைய தேவைகளை எல்லாம் அவர் சந்திக்கிறார். அவருடைய ஆளுகையை, அவருடைய நடத்துதலைச் சார்ந்திருப்போம்.
அன்புள்ள தேவனே, என்னுடைய தேவைகளை எல்லாம் சொல்லக்கூடிய ஒருவராக நீர் இருப்பதற்காக நன்றி. நீர் எனக்குத் தீர்மானித்துள்ள வழிகளிலும், உம்முடைய நடத்துதல்களிலும் நான் மனரம்மியமாக இருப்பதற்கு எனக்கு உதவும்.
நாம் நம்முடைய தேவைகளை ஜெபத்தின்மூலம் தேவனிடம் சொல்லவேண்டியது ஏன் அவசியமாக இருக்கிறது? தேவனுடைய வழிநடத்துதலை நம்பி வாழ்வதற்கு நாம் என்ன செய்யலாம்? – அது எதுவாகவும் இருக்கட்டுமே?