“வெறுமனே பச்சைபசேலென்று மங்கலாக ஒரு உருவத்தைப் பார்ப்பதைவிட மரத்தையும் அதன் ஒவ்வொரு இலைகளையும் பார்ப்பது அற்புதமாக இருக்கும்” என்று என் அப்பா சொன்னார். அது எவ்வளவு உண்மையென்பது எனக்குத் தெரியும். அப்போது எனக்கு பதினெட்டு வயது; புதிதாக கண்ணாடி அணிந்திருந்தேன், அது எனக்குப் பிடிக்கவில்லை என்றாலும், ஒவ்வொன்றையும் ஒரு புதிய விதத்தில் பார்க்கமுடிந்தது; மங்கலாகக் தெரிந்தவை எல்லாம் தெளிவாக அழகாகத் தெரிந்தன!
கண்ணாடி அணியாமல் மரங்களைப் பார்ப்பதுபோலத்தான் சிலசமயங்களில் வேதாகமத்தின் சில புத்தகங்களை வாசிக்கும்போதும் உணர்கிறேன். அவற்றில் அறிந்துகொள்வதற்கு அதிகம் இல்லாததுபோலத் தோன்றுகிறது. ஆனால் சலிப்பூட்டுவதுபோலத் தெரிகிற வசனங்களில் உள்ள விபரங்களைக் கவனிக்கும்போது, ஆச்சரியமான விஷயங்கள் வெளிப்படுகின்றன.
யாத்திராகமப் புத்தகத்தை வாசிக்கும்போது இத்தகைய அனுபவத்தைப் பெற்றேன். இஸ்ரவேலர் மத்தியில் தாம் வாசஞ்செய்வதற்கு தற்காலிகமாக ஆசரிப்புக்கூடாரம் ஒன்றை தேவன் கட்டச்சொல்கிறார். அதன் கட்டுமான விவரங்களைச் சொல்லுகிறார். அதை வாசிக்கும்போது சற்று சலிப்புத் தட்டுகிறது. 25ம் அதிகாரத்தில் குத்துவிளக்கு குறித்த விவரங்களை தேவன் கொடுக்கிறார். அதை சற்று ஆராய்ந்து பார்த்தேன். அதன் தண்டு, கிளைகள், மொக்குகள், பழங்கள், பூக்கள் அனைத்தையும் ‘பசும்பொன்னினால்’ அடிப்புவேலையாய்ச் செய்யச் சொல்லுகிறார். வச 31. அதன் கிண்ணங்கள் “வாதுமை பூக்களை” போல இருக்கவேண்டுமாம். வச 34.
வாதுமை மரங்கள் அற்புதமானவை. அதே இயற்கை அழகு தம்முடைய ஆசரிப்புக்கூடாரத்திலும் காணப்பட தேவன் சொன்னார்!
“காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப் பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்” என்று பவுல் எழுதினார். ரோமர் 1:20. தேவனுடைய அழகைக் காண சிலசமயங்களில் சிருஷ்டிப்பையும், சலிப்புத்தட்டுகிற சில வசனங்களையும் புதிய பார்வையோடு பார்க்கவேண்டும்.
வேதாகமத்தில் தேவனுடைய அழகைக் காணும்படி எவ்வாறு ஒரு புதிய பார்வையோடு அதைப் பார்க்கலாம்? தேவனுடைய அழகுமிக்க சிருஷ்டிப்பானது அவரோடு உங்களை நெருங்கச் செய்ய எவ்வாறு உதவுகிறது?
ஆண்டவரே, உம் சாயலில் எங்களை விலைமதிக்கப் பெற்றவர்களாக உருவாக்கியதற்காக நன்றி. அதை நாங்கள் உணர உதவும்.