விடுமுறை சயமத்தில் என் பிள்ளைகளை ஒரு நீர்வாழ் காட்சிசாலைக்கு அழைத்துச் சென்றிருந்தேன். அவர்கள் சந்தோஷமாக விளையாடினார்கள், எனக்கு சற்று
கவலையிலிருந்தது. அங்கு விசேஷமாகச் செய்யப்பட்டிருக்கும் தொட்டிகளில் உள்ள சிறிய சுறாக்களிடம் மக்கள் விளையாடலாம். அங்கிருந்த உதவியாளரிடம், அந்தச் சுறாக்கள் எப்போதாவது யாருடைய விரலையாவது கடித்திருக்கின்றனவா என்று கேட்டேன். சுறாக்களுக்கு சற்றுமுன்னரே இரையளித்திருப்பதாகவும், அதுவும் கூடுதலாக இரை கொடுத்திருப்பதாகவும் கூறினார். அவற்றிற்கு பசி இருக்காது என்பதால் கடிக்காது என்றார்.

சுறாக்களுடன் பழகுவது குறித்து நான் கற்றுக்கொண்டதை ஒரு நீதிமொழியும் நினைவூட்டுகிறது: “திருப்தியடைந்தவன் தேன்கூட்டையும் மிதிப்பான்; பசியுள்ளவனுக்கோ கசப்பான பதார்த்தங்களும் தித்திப்பாயிருக்கும்.” நீதி 27:7. பசியானது, அதாவது உள்ளுக்குள் வெறுமையாக இருப்பதுபோன்ற உணர்வானது, நாம் தீர்மானங்களைச் செய்யும்போது நம்முடைய பகுத்தறிவை மழுங்கச்செய்யலாம். அந்த வெறுமையைப் போக்க எதையும் செய்வதற்கு அது நம்மைச் சம்மதிக்கவைக்கிறது, ஏன் அடுத்தவருக்கு அது பாதிப்பையே உண்டாக்கினாலும் செய்யவைக்கிறது.

பசிகள் நம் வாழ்க்கையைக் கட்டுப்படுத்த தேவன் விரும்புவதில்லை. கிறிஸ்துவின் அன்பு நம்மில் நிறைந்திருக்க அவர் விரும்புகிறார், அப்போதுதான் நாம் செய்கிற ஒவ்வொன்றிற்கும் அவர் தருகிற சமாதானமும் உறுதியும் அடித்தளமாக இருக்கும். தேவன் நம்மேல் நிபந்தனையற்ற அன்பு செலுத்துகிறார் என்பதை எப்போதும் உணர்ந்திருக்கும்போது, நம்மில் நம்பிக்கை உண்டாகும். சாதனைகள், உடைமைகள், உறவுகள் போன்ற வாழ்க்கையின் “இனிமையான” விஷயங்களில் சரியானதைத் தேர்ந்தெடுக்க அது நம்மைப் பெலப்படுத்தும்.

இயேசுவோடான உறவு மட்டுமே நமக்கு மெய்யான நிம்மதியைக் கொடுக்கிறது. தேவன் நம்மேல் காட்டுகிற ஈடுஇணையற்ற அன்பை நாம் பற்றிக்கொள்ள வேண்டும்; அப்போதுதான் நமக்காகவும் மற்றவர்களுக்காகவும் “தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்பட” முடியும். எபேசியர் 3:19.