1497ம் ஆண்டு, கிரோலாமா ஸவனரோலா என்கிற ஒரு துறவி, நெருப்பு ஒன்றைத் துவக்கினார். பிறகு, மக்களை பாவம் செய்யத்தூண்டுவதாக அல்லது மதக்கடமைகளைப் புறக்கணிக்கச் செய்வதாக தாங்கள் கருதிய பொருட்களை எல்லாம் சேகரிப்பதில் அவரும் அவருடைய சீடர்களும் பல மாதங்கள் செலவிட்டார்கள். அவற்றில் கலைபடைப்புகள், அழகுசாதனங்கள், பிறசாதனங்கள், துணிமணிகள் போன்றவை அடங்கும். குறிப்பிட்ட ஒரு நாளில், ஆயிரக்கணக்கான மாயை பொருட்களை இத்தாலியின் ஃபிளாரன்ஸ் என்கிற இடத்திலுள்ள ஒரு பொது சதுக்கத்தில் குவித்து, தீக்கொளுத்தினார்கள். அந்த நிகழ்வுதான் மாயை பொருட்களின் எரிப்பு என்று அழைக்கப்படுகிறது.

மலைப்பிரசங்கத்தின் சில அதிர்ச்சி தரும் செய்திகளால் உந்தப்பட்டு, ஸவனரோலா இப்படிப்பட்ட தீவிரப்போக்கில் இறங்கியிருக்கலாம். “உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும். உன் வலது கை உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்து போடு” என்று இயேசு சொன்னார். மத்தேயு 5:29-30. இயேசு சொன்னவற்றிற்கு மேற்போக்காக அர்த்தம் கண்டால் முக்கியமான செய்தியைக் காணத் தவறிவிடுவோம். மேலோட்டமாகப் பார்க்காமல் ஆழமாக அர்த்தங்காணும்படிதான் மலைப்பிரசங்கம் முழுவதுமே அமைந்துள்ளது.  அதாவது நம்முடைய இருதயங்களின் நிலை எப்படியிருக்கிறது என்பது முக்கியம், ‘என் கவனம் சிதறியதால், பாவச்சோதனையால் அவ்வாறு செய்தேன்’ என்று சொல்வதில் பயனில்லை.

பொருட்களையும் கலைப்படைப்புகளையும் எரித்தது, காண்பதற்கு பிரமாண்டமான காட்சியாக இருந்திருக்கலாம், ஆனால் அவ்வாறு செய்த மக்களுடைய இருதயங்கள் மாறியிருக்குமா என்பது சந்தேகம்தான். தேவனால் மட்டுமே இருதயத்தை மாற்றமுடியும். அதனால்தான் சங்கீதக்காரன் இவ்வாறு ஜெபிக்கிறார்: “தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.” சங்கீதம் 51:10. நம்முடைய இருதயம் எப்படி இருக்கிறது என்பதுதான் முக்கியம்.