என்னுடைய பாட்டி சமீபத்தில் ஒரு கோப்பு நிறைய பழைய புகைப்படங்களை அனுப்பியிருந்தார்.  நான் இரண்டு வயது சிறுமியாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வீட்டில் நெருப்புமூட்டுகிற இடத்தில், ஓர் ஓரத்தில் நான் உட்கார்ந்திருக்கிறேன். மறுபக்கத்தில் என் அம்மாவின் தோள்களில் என் அப்பா கைபோட்டவாறு அமர்ந்திருக்கிறார். இருவரும் அன்போடும் சந்தோஷத்தோடும் என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் புகைப்படத்தை என் துணிமணிகள் இருந்த அலமாரியில் ஒட்டிவைத்தேன், தினமும் காலையில் அதைப் பார்ப்பேன். அவர்கள் என்மேல் வைத்திருந்த அன்புக்கு ஓர் அருமையான அடையாளம் அது. அந்தப் படத்தை நான் பத்திரப்படுத்தி வைத்திருப்பதற்கான காரணம்
என்னவென்றால், சிலசமயங்களில் மனிதர்களுடைய அன்பு தோற்றாலும்கூட தேவ அன்பு ஒருபோதும் மாறாதது என்பதை அது நினைவூட்டுவதால்தான். அந்தப் படத்தில் என் பெற்றோர் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தது போலவே தேவன் என்னைப் பார்ப்பதாக வேதாகமம் கூறுகிறது.

தேவனுடைய அன்பைப் பற்றி செப்பனியா தீர்க்கதரிசி விவரிக்கிற விதமானது என்னைப் பிரமிக்கச் செய்கிறது. தேவன் தம் மக்கள்மேல் களிகூர்ந்து, மகிழ்ச்சியுடன் பாடுவதாகக் கூறுகிறார். தேவ பிள்ளைகள் அந்த அன்பைச் சம்பாதித்து வாங்கவில்லை. அவர்கள் அவருக்குக் கீழ்ப்படியாமலும் ஒருவர்மேல் ஒருவர் மனதுருக்கமாக நடக்காமலும் இருந்தார்கள். ஆனால் இந்தத் தோல்விகளுக்கு மத்தியிலும் தேவ அன்பே இறுதியில் மேலானதாக விளங்குமென செப்பனியா வாக்குரைக்கிறார். தேவன் அவர்களுடைய தண்டனையை நீக்கி (செப்பனியா 3:15), அவர்கள்மேல் சந்தோஷப்பட்டுக் களிகூருவார். வசனம் 17.  தம் மக்களாகிய அவர்களை தம் கரங்களுக்குள் கூட்டிச்சேர்த்து, அவர்களை சொந்தத் தேசத்திற்கு வழிநடத்திச் சென்று, புது வாழ்வைக் கொடுப்பார். வசனம் 20.

ஒவ்வொரு நாள் காலையிலும் தியானிப்பதற்கு தகுதியான அன்பு அது.