பிரபல ஃப்ரெஞ்ச் ஓவியரான எட்கார் டேகாஸ் என்பவர், பாலே நடனக்குழு மங்கைகளின் ஓவியத்திற்காக உலகப்புகழ் பெற்றவர். ஆனால் தன் சகஓவியரும் நண்பருமான எட்வர்ட் மேனட் மீது அவர் எவ்வளவுக்கு பொறாமை கொண்டிருந்தார் என்பது யாருக்கும் அதிகம் தெரியாது. மேனடைப் பற்றி, “அவன் எதைச் செய்தாலும் உடனே நன்றாக வந்துவிடுகிறது, ஆனால் நான் எவ்வளவுதான் பாடுபட்டாலும் சரியாக வருவதில்லை” என்று டேகாஸ் சொன்னார்.
பொறாமை உணர்வுதான் இதற்கு காரணம். மோசமான குணங்களில் பொறாமையையும் பவுல் பட்டியலிடுகிறார். “அநியாயம், வேசித்தனம், துரோகம், பொருளாசை, குரோதம், பொறாமை, கொலை, வாக்குவாதம், வஞ்சகம், வன்மம்” போன்றவை கேடான சிந்தையால் உண்டாவதாகச் சொல்கிறார் (ரோம. 1:29). தேவனைத் தொழுதுகொள்ளாமல் விக்கிரகங்களைத் தொழுவதால் இத்தகைய சிந்தைகள் உண்டாகின்றன (வச. 28).
விசுவாசிகள் மத்தியில் பொறாமை உருவானால் “மெய்யான ஒரே அன்பைவிட்டு நம்முடைய இருதயங்கள் திசைதிரும்புவதே” அதற்கு காரணமென்கிறார் கிறிஸ்டினா ஃபாக்ஸ். நாம் பொறாமை கொள்ளும்போது, “இயேசுவைப் பார்க்காமல் இவ்வுலகின் கீழ்த்தரமான இன்பங்களை நாடி ஓடுகிறோம். உண்மையில், நாம் யாரென்பதையே மறந்துபோகிறோம்” என்று அவர் சொன்னார்.
ஆனாலும் இதற்கு ஒரு தீர்வு இருக்கிறது. தேவனிடம் திரும்புங்கள். “உங்களை ஒட்டுமொத்தமாக தேவனிடம் அர்ப்பணியுங்கள்” என்று பவுல் வலியுறுத்துகிறார். பார்க்கவும்: ரோமர் 6:13. குறிப்பாக, உங்களுடைய வாழ்க்கையையும் வேலையையும் அர்ப்பணியுங்கள். தன்னுடைய மற்றொரு நிருபத்தில் பவுல், “அவனவன் தன்தன் சுயகிரியையைச் சோதித்துப்பார்க்கக்கடவன்; அப்பொழுது மற்றவனைப் பார்க்கும்போதல்ல, தன்னையே பார்க்கும்போது மேன்மைபாராட்ட அவனுக்கு இடமுண்டாகும்” என்று எழுதுகிறார். கலாத்தியர் 6:4.
தேவனுடைய ஆசீர்வாதங்களுக்காக நன்றி. குறிப்பாக, அவருடைய கிருபையின் விடுதலைக்காக நன்றி. தேவன் நமக்குத் தந்திருக்கும் ஈவுகளை வைத்து, நாம் மனரம்மியமாக வாழலாம்.
தேவன் உங்களுக்குத் தந்திருக்கும் என்னென்ன தாலந்துகளை, ஆவிக்குரிய வரங்களை, ஆசீர்வாதங்களை நினைத்துப் பார்க்க மறந்திருக்கிறீர்கள்? அவற்றைத் தியானித்து, தேவனிடம் திரும்பும்போது, எப்படிப்பட்ட உணர்வை அடைகிறீர்கள்?
அன்புள்ள ஆண்டவரே, என்னை உம்பக்கமாக இழுத்துக் கொள்ளும். நீர் ஒருவரே என் உண்மையான, தயாளமுள்ள அன்பர் என்பதை எனக்கு உணர்த்தும். ஏனென்றால் பிறருடைய தாலந்துகளையும், ஆசீர்வாதங்களையும் நான் காண அவசியமில்லை.