எங்களுடைய சபையைச் சேர்ந்த ஒருவருடைய வீடு தீ விபத்தில் சிக்கியது. அந்தக் குடும்பத்தில் மொத்தம் ஆறு பேர். கணவனும் மகனும் பிழைத்துக் கொண்டார்கள்; மனைவியும் அம்மாவும் இரண்டு சிறிய குழந்தைகளும் அந்த விபத்தில் மரித்துப் போனார்கள். மனதைப் பிளக்கிற இத்தகைய சம்பவங்களை ஓயாமல் கேள்விப்படுகிறோம். இப்படிப்பட்ட சம்பவங்கள் நேரிடும் போதெல்லாம் எழும்புகிற கேள்வி, “நல்லவர்களுக்கு ஏன் மோசமான சம்பவங்கள் நேரிடுகின்றன?” என்பதுதான். எல்லாக் காலத்திலும் இந்தக் கேள்விக்கு பதில் கிடைக்காமல்தான் இருந்திருக்கிறது.
சங்கீதம் 46ல் சங்கீதக்காரன் வலியுறுத்துகிற சத்தியமும்கூட எல்லாக் காலங்களிலும் பேசப்படுகிறது, வாக்குத்தத்தமாகப் பார்க்கப்படுகிறது, மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. “தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்.” வசனம் 1. பூமியும் மலைகளும் அதிர்வது, சமுத்திரம் கொந்தளிப்பது என்று பேரழிவுகள் பற்றி 2,3ம் வசனங்கள் பேசுகின்றன. இதுபோன்ற பேரழிவில் சிக்குவதை நினைத்தாலே நமக்கு நடுக்கம் ஏற்பட்டு விடும். சிலசமயங்களில் இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நாம் உண்மையிலேயே சிக்கிக்கொள்கிறோம். மரணத்தைக் கொண்டுவரும் நோய்கள், கொடிய பணப்பிரச்சனை, நமக்கு பிரியமானவர்களின் மரணம் போன்றவை பேரழிவுகளாக அமைகின்றன.
இப்படிப்பட்ட பிரச்சனைகள் நேரிடும்போது, தேவன் உண்மையில் இருக்கிறாரா என்று யோசிக்கத் தூண்டப்படுகிறோம். அப்படி யோசிக்க அவசியமில்லையென வேதாகமம் கூறுகிறது. “சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்; யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர்.” வசனங்கள் 7,11. நம்மால் தாங்கமுடியாத சூழ்நிலைகளின் மத்தியிலும் அவருடைய பிரசன்னம் நம்மோடுகூட இருக்கும். அவர் நல்லவராகவும், அன்புள்ளவராகவும், நம்பிக்கைக்கு பாத்திரராகவும் இருப்பதால் நாம் ஆறுதலடையலாம்.
உங்கள் வாழ்க்கையில் உண்டான எந்தப் பிரச்சனையின்போது, தேவன் இருக்கிறாரா என்று யோசிக்கத் தூண்டப்பட்டீர்கள்? அந்தச் சூழ்நிலையை மாற்றுவதற்கு உங்களுக்கு உதவியாக இருந்தது எது?
பிதாவே, உம்முடைய அரவணைப்பிலும் அல்லது பிரசன்னத்திலும் எனக்கு சந்தேகம் எழும்போது, உம்முடைய வார்த்தையின் சத்தியத்தில் நான் நம்பிக்கை வைக்க எனக்கு உதவும்.