நான் ஆசியாவில் பயணம் மேற்கொண்டிருந்தபோது என்னுடைய ஐ-பாடின் திரையில் ஏற்பட்ட கோளாறால் அது செயலிழந்துபோனது. (வாசிப்பு உபகரணங்களும் பணி ஆவணங்கள் பலவும் அதில்தான் இருந்தன) எனவே ஒரு கணினி கடைக்குச் சென்றேன்; அங்கே இன்னொரு பிரச்சனை எழுந்தது. அதாவது எனக்கு சீன மொழி பேசத்தெரியாது, அந்தக் கடையிலிருந்த தொழில்நுட்பவியலாளருக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது. தீர்வுதான் என்ன? ஒரு மென்பொருளைத் திறந்து, தான் கேட்க விரும்பியதை சீன மொழியல் தட்டச்சு செய்தார்; அது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டது. அதை என்னால் வாசிக்கமுடிந்தது. அதற்கு பதிலளிக்கும் விதத்தில் நான் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ததை அவர் சீனமொழியில் வாசிக்க முடிந்தது. நாங்கள் வெவ்வேறு மொழி பேசுபவர்களாக இருந்தாலும், நாங்கள் தடையின்றி தகவல் தொடர்பு கொள்வதற்கு அந்த மென்பொருள் உதவியது.
சில சமயங்களில், நான் பரலோக பிதாவை நோக்கி ஜெபிக்கும்போது, என் இருதயத்திலுள்ளதைத் தெரிவிக்க இயலாத நிலையில் இருப்பேன். இதுபோன்ற அனுபவம் எனக்கு மட்டும் அல்ல, ஜெபிக்கும்போது பலருக்கு இந்தப் பிரச்சனை உண்டாகலாம். ஆனால், அப்போஸ்தலனாகிய பவுல் பின்வருமாறு எழுதுகிறார்: “ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிற படியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார். ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்துபார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார்” (ரோம. 8:26-27).
பரிசுத்த ஆவியானவரின் இந்த ஈவு எத்தனை அருமையானது! எந்தவொரு கணினியின் மென்பொருளையும்விட என்னுடைய சிந்தைகளையும் ஆசைகளையும் பிதாவின் நோக்கங்களுக்கு இசைவான விதங்களில் அவர் தெளிவாகத் தெரியப்படுத்துகிறார். ஆவியானவரின் இந்தக் கிரியையின் நிமித்தம் ஜெபத்திற்கு பதில் கிடைக்கிறது!
உங்களுடைய ஜெபவாழ்க்கையில் என்ன சவால்களைச் சந்தித்திருக்கிறீர்கள்? தேவனை நோக்கி இன்னும் அதிக உத்வேகத்துடன் ஜெபிப்பதற்கு பரிசுத்த ஆவியானவரை எவ்வாறு சார்ந்திருக்கலாம்?
பிதாவே, ஆவியானவரின் ஈவுக்காகவும், ஜெபம் எனும் சிலாக்கியத்திற்காகவும் உமக்கு நன்றி. எவ்வாறு ஜெபிப்பது என்று தவிக்கும் சமயங்களில் உம்முடைய ஆவியானவரை நான் சார்ந்திருக்க எனக்கு உதவும்.