1877ம் வருடத்தில் ஒருநாள் ஆலய ஆராதனையின்போது, கிறிஸ்துவை ஏற்றுக்கொள்கிறவர்கள் முன்னால் வரும்படி அழைப்புவிடுக்கப்பட்டது. ராட்னி ஸ்மித் என்கிற வாலிபர் முன்னே சென்றபோது “இவன் ஒரு நாடோடி” என்று யாரோ ஏளனமாக முணுமுணுத்தது அவர் காதில் விழுந்தது. ராட்னியின் பெற்றோரும் கல்வியறிவற்ற நாடோடிகள் தாம்; இந்த வாலிபர் பற்றி யாருமே பெரிதாக எண்ணவில்லை. ஆனால் தன்னைக் குறித்து தேவனுக்கு ஒரு நோக்கம் உண்டென்பதை ராட்னி நிச்சயமாக அறிந்திருந்தார். ஒரு வேதாகமத்தையும் ஆங்கில அகராதியையும் வாங்கி, வாசிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டார். “இயேசுவிடம் செல்வதற்கான வழி கேம்பிரிட்ஜிலும், ஹார்வர்டிலும், யேலிலிலும் அல்லது கவிதைகளிலும் இல்லை. கல்வாரி என்கிற முற்கால மலையில்தான் உள்ளது” என்று இவர் ஒருமுறை சொன்னார். எல்லா தடைகளையும் தாண்டி, ஒரு சுவிசேஷகரானார் ராட்னி; அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் அநேகரை கிறிஸ்துவிடம் வழி நடத்தினார்.
பேதுருவும் சாதாரண ஒரு மனிதர்தான். ரபிமார்களின் மதப்பள்ளியில் படித்தவரல்ல (அப் 4:13), கலிலேயாவைச் சேர்ந்த ஒரு மீனவர். அந்த நிலையில்தான் “என் பின்னே வாருங்கள்” என்று இயேசு அழைத்தார். மத் 4:19. பேதுருவின் வளர்ப்பும், வழி நெடுகிலும் அவர் சந்தித்த தோல்விகளும் ஒரு புறம் இருந்தாலும், இயேசுவைப் பின்பற்றுகிறவர்கள் பற்றி “தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும்” என்று பின்னர் அவர் உறுதியாகக் கூறமுடிந்தது. 1பேதுரு 2:9.
கல்வி, வளர்ப்பு, பாலினம் அல்லது இனம் போன்ற வேறுபாடுகளைக் கடந்து இயேசுவின் மூலம் அனைவருமே தேவனுடைய குடும்பத்தில் சேரமுடியும், அவரால் பயன்படுத்தப்பட முடியும். இயேசுவை விசுவாசிக்கிற அனைவருமே “அவருடைய சொந்த ஜனமாக” மாறலாம்.
தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், தேவனுடைய சொந்த ஜனமாயும் இருப்பதை எவ்வளவு உயர்வாகக் கருதுகிறீர்கள்? தேவன் தமக்கு கனமுண்டாகிற விதத்தில் உங்களைப் பயன்படுத்தமுடியும் என்கிற உண்மை எவ்வாறு உங்களை ஊக்கப்படுத்த முடியும்?
தேவனே, என்னுடைய அடையாளத்தை உம்மில் காணமுடியும் என்பதற்காக உம்மை ஸ்தோத்தரிக்கிறேன்.