நியூயார்க் நகரிலிருந்து சான் ஆன்டோனியோவிற்குச் சென்றுகொண்டிருந்த விமானத்தினுள் இருபது நிமிடங்களில் நிலைமாறியது, அந்த விமானத்தின் ஒரு என்ஜின் உடைந்து ஒரு துண்டு விமானத்தின் ஜன்னலை உடைக்க, உள்ளே காற்றழுத்தம் குறைந்து ஒருவர் இறந்தார். பலர் காயமடைந்தனர். விமானத்தினுள் குழப்பம் ஏற்பட்டது. விமானி அறையில், ஒரு நிதானமான, திறமையுள்ள, கப்பற்படையில் போர் விமானியாகப் பயிற்சி பெற்ற இந்த விமானி மட்டும் இல்லாதிருந்தால் இந்த நிலைமை மிகவும் பரிதாபத்துக்குரியதாக இருந்திருக்கும். மறுநாள், உள்ளுர் செய்தித்தாளில் தலையங்கம், “அற்புதமான கரங்களில்” என்றிருந்தது.
சங்கீதம் 31ல், தேவனுடைய அற்புதமான பாதுகாக்கும் கரங்களைப் பற்றி தாவீது வெளிப்படுத்துகின்றார். அதனாலேயே அவர் உறுதியாக, “உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்” (வச. 5) என்று சொல்ல முடிகிறது. வாழ்வில் எப்படிப்பட்ட பிரச்சனை வந்தாலும் தேவனையே நம்பிவாழ தாவீது அறிந்திருந்தார். பகைவரின் படைகள் தாவீதின் பிராணனை வாங்கத் தேடிக் கொண்டிருந்ததால் அவனுடைய வாழ்வு மிகவும் நெருக்கத்திலிருந்தது. எவ்வளவு பாதுகாப்பற்றிருந்தாலும் அவர் நம் நம்பிக்கையையிழக்கவில்லை. துயரங்களின் மத்தியில் தாவீது விடுதலையின் பெருமூச்சையும், மகிழ்ச்சியையும் உணரமுடிந்தது, ஏனெனில், உண்மையுள்ள அன்பின் தேவனை அவன் தன் நம்பிக்கையின் துருகமாகக் கொண்டிருந்தான் (வச. 5-7).
ஒருவேளை உன்னுடைய வாழ்விலும் மோசமான நிகழ்வுகள் எல்லாதிசையிலிருந்தும் உன்னைத் தாக்கலாம். என்ன நடக்குமோ என நீ அங்கலாய்க்கலாம். உறுதியற்ற நிலையிலும், குழப்பத்தின் மத்தியிலும், குழறுபடியின் நடுவிலும் ஒன்றுமட்டும் உறுதியாயுள்ளது. தேவனுடைய அற்புதமான கரத்தில் இருப்பவர்களுக்கு எப்பொழுதும் பாதுகாப்பு உண்டு.
பிதாவே, சங்கீதம் 31:5ல் இயேசு சிலுவையில் ஜெபித்தபடி ஒப்புக்கொடுத்தாரே. பாடுகளின் மத்தியில், அவர் தன் வாழ்வை உம்மிடம் ஒப்புக் கொடுத்தது போல், நானும் பலப்பட உதவும்.
நீ உன் இவ்வுலக வாழ்வையும் மறு உலக வாழ்வையும் தேவனிடம் கொடுத்து விட்டாயா? நல்ல நேரங்களிலும், கெட்ட நேரங்களிலும் தேவனையே நம்பியிருக்கிறேன் என்று எவ்வாறு காட்டுகின்றாய்?