எங்களுடைய மகளின் கூடைப்பந்து விளையாட்டை திறந்தவெளி அரங்கத்திலிருந்து நாங்கள் பார்த்துக்கொண்டிருந்தபோது, ஆடுகளத்திலிருந்த பெண்களிடம் பயிற்சியாளர் ஒரு வார்த்தையைச் சொல்லிக் கேட்டேன். “டபுள்ஸ்” என்றார். உடனே அப்பெண்கள் எதிர்த்து விளையாடும் யுக்தியை மாற்றிக் கொண்டனர். ஒருவர் மீது ஒருவர் என்பதிலிருந்து மாறி, இருவர் இணைந்து எதிர் குழுவிலுள்ள மிக உயரமான பந்து பிடிக்கும் விளையாட்டு வீராங்கனையை எதிர்த்து விளையாடினர். இம்முறையால் அந்த வீராங்கனை பந்து எறிந்து எண்ணிக்கை ஏற்றுவதை வெற்றிகரமாகத் தடுக்க முடிந்தது. அத்தோடு, பந்தினை தளத்தின் வழியே தங்களுடைய கூடைக்கு எடுத்துச் செல்லவும் முடிந்தது.

பிரசங்கியை எழுதிய சாலமோன், இவ்வுலகில் கடின வேலையாலும், விரக்தியாலும் போராடிக்கொண்டிருக்கும் போது நம்முடைய வேலையில் நமக்கொரு துணையிருக்குமேயாயின் அது மிகுந்த பலனைத் தருமென்கின்றார் (பிர. 4:9). ஒருவன் தனிமையாய் யுத்தம் செய்தால், எதிரியால் மேற்கொள்ளப்படலாம். ஆனால், இருவர் சேர்ந்தால் எதிரியை மேற்கொள்ள முடியும் (வச.12). “ஒருவன் விழுந்தால் அவனுடைய உடனாளி அவனைத் தூக்கி விடுவான்” (வச. 10).

சாலமோனின் இந்த வார்த்தைகள் நம்முடைய பிரயாணத்தை பிறரோடு சேர்ந்து செய்யும்படி ஊக்குவிக்கின்றது; வாழ்வின் சோதனைகளை நாம் தனிமையாய் எதிர்நோக்க வேண்டியதில்லை. நம்மில் சிலருக்கு தங்களுடைய பிரச்சனைகளை பிறரோடு பகிர்ந்துகொள்வதில் தயக்கமிருக்கலாம். வேறுசிலர் பகிர்ந்துகொள்ள ஆர்வம் காட்டினாலும் நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் கஷ்டப்படலாம். எது எப்படியாயினும், நம்முடைய முயற்சியில் நாம் சோர்ந்து போகக் கூடாது.

சாலமோனும், கூடைப்பந்து பயிற்சியாளரும் நமக்கொரு துணையாளர் இருப்பதே சிறந்த யுக்தியென கருதுகின்றனர். விளையாட்டு மைதானத்திலும், வாழ்க்கையிலும் வருகின்ற பெரிய போராட்டங்களை நாம் எதிர்நோக்கும்போது நம்மருகில் ஒரு துணையாளர் இருத்தல் சிறந்தது. எங்கள் வாழ்வில் எங்களுக்கு ஊக்கத்தையும், உறுதுணையும் தரும்படி தந்துள்ள மக்களுக்காக உமக்கு நன்றி கூறுகின்றேன்.