என்னுடைய நண்பனின் தந்தையுடைய மருத்துவ ஆய்வு அறிக்கை, அவருக்கு புற்று நோயிருப்பதாகத் தெரிவித்தது. ஆனாலும் கீமோ சிகிச்சையின் போது அவர் இயேசுவின் மீது விசுவாசம் வைத்தார். அத்தோடு குணமடைந்த நிலையையும் அடைந்தார். அவர் பதினெட்டு மாதங்கள் புற்று நோயிலிருந்து விடுதலை பெற்றவராக வாழ்ந்தார். ஆனால், அது திரும்பவும் வந்தது. முன்னிலைமையையும் விட மோசமாகத் தாக்கப்பட்டார். அப்போதும் அவரும் அவருடைய மனைவியும் கரிசனையோடும், ஏன் என்ற கேள்வியோடும் சந்தித்தபோதும் தேவன் மீதுள்ள நம்பிக்கையை விட்டுவிடவில்லை. ஏனெனில், முதல்முறை நோய் தாக்கிய போது தேவன் அவரை எவ்வாறு காத்துக் கொண்டார் எனக் கண்டு கொண்டனர்.
நாம் ஏன் சோதனைகளின் வழியே கடந்து செல்கின்றோம் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை. இதுவே யோபுவின் நிலையும் கூட, அவர் மிகவும் கொடுமையான விவரிக்க இயலாத துயரத்தையும், நஷ்டத்தையும் சந்தித்தார். ஆனாலும் அவருடைய அநேகக் கேள்விகளுக்கிடையே யோபு 12ல் தேவனுடைய வல்லமையை வெளிப்படுத்துகின்றார். “இதோ, அவர் இடித்தால் கட்ட முடியாது. அவர் மனுஷரை அடைத்தால் விடுவிக்க முடியாது” (வச. 14) “அவரிடத்தில் பெலனும் ஞானமும் உண்டு (வச. 16) “அவர் ஜாதிகளை பெருகவும் அழியவும் பண்ணுகிறார்” (வச. 23). இந்த நீண்ட பட்டியலில் யோபு, தேவன் ஏன் வேதனையையும் துன்பங்களையும் அனுமதித்தார், அவருடைய நோக்கம் என்ன என்பதைக் குறித்து குறிப்பிடவேயில்லை. யோபுவிடம் அதற்கு பதிலும் இல்லை. ஆனாலும் இவை அனைத்தின் மத்தியிலும் அவன் தைரியமாகச் சொல்கின்றான். “தேவனிடத்தில் ஞானமும், வல்லமையும் எத்தனை அதிகமாய் இருக்கும். அவருக்குத்தான் ஆலோசனையும், புத்தியும் உண்டு” (12:13).
தேவன் ஏன் சில போராட்டங்களை நம் வாழ்வில் அனுமதிக்கின்றாரென நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை. என்னுடைய நண்பனின் பெற்றோரைப் போன்று நாமும் நம்முடைய நம்பிக்கையை அவர் மீது வைப்போம். தேவன் நம்மை நேசிக்கின்றார். மாம்சமான சகல மனுஷரின் ஆவியும் அவர் கையிலிருக்கின்றது (வச. 10) அவர் நம்மை விசாரிக்கின்றவர் (1 பேது. 5:7) ஞானமும், வல்லமையும், புத்தியும் கொள்ளலும் அவருக்கேயுரியது.
நீ எத்தகைய போராட்டங்களின் வழியே சென்று கொண்டிருக்கின்றாய்? இந்தப் போராட்டங்கள் எப்படி தேவன் உன்னோடிருந்து, உனக்கு உதவியாயிருக்கின்றார் என்பதைக் கண்டு கொள்ள உதவுகின்றன?