பழங்காலப் பொருட்களைப்பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த முனைவர். வார்விக் ராட்வெல் தன்னுடைய பணி ஓய்விற்காகத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தபோது, இங்கிலாந்து தேசத்தில், லிச்பீல்டிலுள்ள பேராலயத்தில் ஓர் அரிய காரியத்தைக் கண்டுபிடித்தார். கட்டடக் கலைஞர்கள் அந்த தேவாலயத்தின் தளத்தின் ஒரு பகுதியை மிகவும் கவனத்தோடு தோண்டியெடுத்து, அதில் நகரக்கூடிய ஒரு தளத்தை அமைக்க முயற்சித்துக் கொண்டிருந்த போது அங்கு பிரதான தூதனான காபிரியேல் தூதனின் சிலையைக் கண்டெடுத்தனர். அது ஏறத்தாள 1200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என கண்டு கொண்டனர். எனவே முனைவர் ராட்வெல்வின் பணி ஓய்வுத்திட்டம் தள்ளி வைக்கப்பட்டது. அவருடைய கண்டுபிடிப்பு ஒரு புதிய ஆர்வத்தோடு, ஒரு புதிய கோணத்தில் அவரைச் செயல்படவைத்தது.

மோசேயும் எண்பது வயதான போது ஓர் அனல்மூட்டும் கண்டுபிடிப்பிற்குள் இழுத்துக் கொள்ளப்பட்டான். அவனுடைய வாழ்வே மாறியது. எகிப்து ராஜகுமாரியின் வளர்ப்பு மகனாக இருந்தபோதும் அவன் தான் ஓர் எபிரெயரின் வழிவந்தவன் என்பதை மறக்கவேயில்லை. தன்னுடைய உறவினருக்கு இழைக்கப்பட்ட அநீதியைகக் கண்ட போது அவன் கொதித்தெழுந்தான் (யாத். 2:11-12) எபிரெயனை அடித்த ஓர் எகிப்தியனை மோசே கொன்று போட்டான் எனப் பார்வோன் கேள்வியுற்ற போது, மோசேயைக் கொன்று போட திட்டம் செய்தான். எனவே மோசே மீதியான் தேசத்திற்கு தப்பி சென்று அங்கு தங்கினான் (வச. 13-15).

நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னர், அவன் எண்பது வயதான போது, தன்னுடைய மாமனாரின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது, “அங்கே கர்த்தருடைய தூதனானவர் முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினி ஜீவாலையிலே நின்று அவனுக்கு தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான். முட்செடி அக்கினியால் ஜூவாலித்து எரிந்தும், வெந்து போகாமல் இருந்தது” (3:2). முட்செடியின் நடுவிலிருந்து தேவன் மோசேயைக் கூப்பிட்டார். எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்களை விடுவித்து வழிநடத்துமாறு அவனிடம் கூறினார் (வச. 3-25).

உன் வாழ்வின் இந்த வேளையில் தேவன் எத்தகைய நோக்கத்திற்காக உன்னை அழைக்கின்றார்? உன்னுடைய பாதையில் தேவன் என்ன புதிய திட்டத்தை வைத்திருக்கின்றார்?