கானாவில் நான் சிறுவனாக வளர்ந்த போது, என்னுடைய தந்தையின் கரத்தைப் பற்றிக் கொண்டு மக்கள் கூட்டம் நிரம்பிய இடங்களில் நடந்து செல்வதில் மகிழ்ச்சியடைந்துள்ளேன் அவர் என் தந்தையும், நண்பனுமாயிருந்தார். எங்களுடைய கலாச்சாரத்தில் கரம் கோர்த்து நடப்பதென்பது நட்பின் அடையாளம். அவ்வாறு நடக்கும் போது வெவ்வேறு வகையான காரியங்களைக் குறித்து நாங்கள் பேசிக் கொள்வோம். நான் தனிமையை உணரும் போதெல்லாம் என் தந்தையோடு பேசுவது எனக்கு மிகுந்த ஆறுதலாக இருக்கும். நாங்கள் ஒருவரோடொருவர் நட்பாயிருப்பதை மிகவும் உயர்ந்ததாகக் கருதினேன்.
இயேசுவும் தன்னைப் பின்பற்றியவர்களை நண்பர்களென அழைத்தார். அவர்களுக்கு தன் நட்பின் அடையாளத்தைக் காட்டினார். “பிதா என்னில் அன்பாயிருக்கிறது போல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்” (யோவா. 10:9) என்றார். தன் சிநேகிதனுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கின்ற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை (வச. 13) என்றார். அவருடைய ராஜ்ஜியத்தின் காரியங்களை அவர்களுக்குத் தெரிவிக்கின்றார் (வச. 15). பிதாவினிடத்தில் கேள்விப்பட்ட யாவற்றையும் உங்களுக்குத் தெரிவித்தேன் என்றார் (வச. 15). அவருடைய ஊழியத்திலும் பங்கு கொள்ளும்படி அவர்களுக்கு வாய்ப்பளிக்கின்றார் (வச. 16).
நம்முடைய வாழ்க்கையில் துணையாக இயேசு நம்மோடு நடந்து வருகின்றார். நம்முடைய மனவேதனைகளையும் விருப்பங்களையும் அவர் கவனித்துக் கேட்கின்றார். நம்முடைய தனிமையான வேளையிலும் உள்ளம் சோர்ந்த நிலையிலும் ஒரு நண்பனாக இயேசு நமக்குத் துணை நிற்கின்றார்.
நாம் ஒருவரிலொருவர் அன்பாயிருந்து அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவோமாயின், இயேசுவோடுள்ள நம்முடைய உறவு நிலைத்திற்கும் (வச. 10,17). நாம் அவருடைய கற்பனைகளுக்கு கீழ்ப்படிவோமாயின் மிகுந்த, நிலையான கனிகளைக் கொடுப்போம் (வச. 16).
மிகுந்த ஜனக்கூட்டம் நிறைந்த தெருக்களின் வழியேயும், ஆபத்து நிறைந்த சாலைகளின் வழியேயும் இந்த குழப்பம் நிறைந்த உலகில் செல்லும் போதும் தேவன் நம்மோடு கூட நடந்து வருவதை உணரலாம். அதுவே அவர் நம்முடைய நண்பன் என்பதற்கு அடையாளம்.
இயேசுவின் நண்பனாயிருக்க நாம் எப்படி இருக்க வேண்டும்? அவர் உன்னோடிருக்கின்றார் என்பதை எப்படி உனக்கு வெளிப்படுத்தியுள்ளார்?