என்னுடைய தந்தைக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. எனவே அவருடைய மருத்துவர், அவருடைய இருதயத்தை நன்கறிய ஒரு சோதனை செய்தார். விளைவு? மூன்று இரத்த நாளங்களிலே அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
பிப்ரவரி 14 ஆம் நாள் மூன்று இடங்களில் துணைப்பாதை அமைக்கும் அறுவை சிகிச்சை செய்ய நிர்ணயிக்கப்பட்டது. என்னுடைய தந்தை அந்த நாளை ஒரு நம்பிக்கையைக் கொடுக்கும் நாளாக எதிர்பார்த்தார். “வாலன்டைன்ஸ் தினத்தன்று நான் ஒரு புதிய இருதயத்தைப் பெற்றுக் கொள்வேன்” என்றார். அதுவும் நடைபெற்றது. அந்த அறுவை சிகிச்சை நன்றாகச் செய்யப்பட்டது. போராடிக் கொண்டிருந்த அவருடைய இருதயத்திற்கு நல்ல இரத்த ஓட்டம் நடைபெறும்படி புதுப்பிக்கப்பட்ட புது இருதயத்தைப் பெற்றுக் கொண்டார்.
என்னுடைய தந்தையின் அறுவை சிகிச்சை, தேவன் நமக்குக் கொடுக்கின்ற புதிய வாழ்வை நினைவுபடுத்தியது. ஆவிக்குரிய குழாய்களை பாவம் அடைத்துக் கொள்வதால் நாம் தேவனோடு உறவுகொள்ள தடுமாறுகின்றோம். இந்த அடைப்பை அகற்றுவதற்கு ஆவிக்குரிய அறுவை சிகிச்சை தேவை.
எசேக்கியேல் 36:26ல், தேவன் இதனையே தமது ஜனத்திற்கு வாக்களித்துள்ளார். இஸ்ரவேல் ஜனங்களிடம், “உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து… கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்” மேலும், “நான் உங்களுடைய எல்லா அசுத்தங்களையும்… நீக்கி உங்களைச் சுத்தமாக்குவேன்” (வச. 25), “உங்கள் உள்ளத்தில் என் ஆவியை வைத்து… (வச. 27). நம்பிக்கையிழந்த ஒரு ஜனத்திற்கு ஒர் புதிய துவக்கத்தைத் தருகின்றார். வாழ்வைப் புதிதாக்குகின்றார்.
இயேசு கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலமாக இந்த வாக்கு முழுமையாக நிறைவேற்றப்பட்டது. நாம் அவரை விசுவாசிக்கும் போது புதிய ஆவியுள்ள இருதயத்தைப் பெற்றுக் கொள்வோம். அந்த ஆவியானவர் நம்முடைய பாவங்களையும், மீறுதல்களையும் நீக்கி, நம்மைச் சுத்தமாக்கி புதிய இருதயத்தைத் தருகின்றார். தேவனுடைய ஆவியால் நிரப்பப்பட்ட நம்முடைய புதிய இருதயம், வாழ்வுதரும் கிறிஸ்துவின் புதிய இரத்தத்தினால் இயங்குகின்றது. நாமும் புதிய ஜீவனுள்ளவர்களாய் வாழ்வோம் (ரோம. 6:4)
குற்ற உணர்வோடும், அவமானத்தோடும் போராடிக்கொண்டிருக்கும் உனக்கு தேவன் வாக்களித்துள்ள புதிய வாழ்வு எப்படி நம்பிக்கையைத் தருகிறது? உன்னுடைய சொந்த பலத்தைச் சாராமல் பரிசுத்த ஆவியின் வல்லமையை எவ்வாறு சார்ந்து கொள்வாய்?