பெரிதாக்கிக் காட்டும் ஒரு லென்ஸையும், நுண்ணிய ஓர் இடுக்கியையும் கொண்டு வேலை செய்துகொண்டிருக்கும், சுவிஸ் கடிகாரம் செய்யும் பிலிப், அதிக கவனத்தோடு அந்த கடிகாரத்தின் பாகங்களை எப்படி பிரிப்பது, சுத்தப்படுத்துவது, மீண்டும் அந்த இயந்திரத்தின் நுண்ணிய பாகங்களை எப்படி பொருத்துவது என எனக்கு விளக்கிக் காண்பித்தார். அதிலுள்ள மிக நுணுக்கமான பகுதிகளுக்குள்ளே, கடிகாரத்திற்குத் தேவையான மிக முக்கியமான, ஒரு சிறிய சுருள்வில்லைக் (ஸ்பிரிங்) காண்பித்தார். அந்த முக்கிய சுருள்வில்தான் அங்குள்ள கியர் அமைப்பினை இயங்கச்செய்து சரியான நேரத்தைக் காட்ட உதவுகின்றது. எத்தனை சிறப்புமிக்க கடிகாரமாயிருந்தாலும் இந்த முக்கிய ஸ்பிரிங் இல்லாமல் இயங்க முடியாது என்றார்.
புதிய ஏற்பாட்டில் அடங்கியுள்ள எபிரெயர் புத்தகத்தில் அதனை எழுதியவர் இயேசுவின் மூலமாக தேவன் பரலோகத்தையும், பூலோகத்தையும் படைத்தார் என்பதால், இயேசுவை மனதாரப் போற்றுகின்றார்.
ஒரு சிறப்புமிக்க கடிகாரத்தின் நுணுக்கங்களைப் போன்று, இந்த உலகின் ஒவ்வொரு நுணுக்கமும் இயேசுவால் படைக்கப்பட்டது (எபி. 1:2). சூரிய மண்டலம் முதல் நம்முடைய விரல் ரேகையில் தனித்துவம் வரை எல்லாம் அவராலேயே படைக்கப்பட்டது.
ஒரு கடிகாரத்தின் இயக்கத்திற்கு நுண்ணிய முதன்மை சுருள்வில் எப்படி முக்கியமானதோ அப்படியே எல்லாப் படைப்புகளும் இயங்கவும், செழித்தோங்கவும் காரணமான இயேசு படைப்பாளியையும் விட மேலாகத் திகழ்கின்றார். அவருடைய பிரசன்னம், ‘தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்கிறவராய்” (வச. 3) காணப்படுகின்றார். மேலும் அவருடைய படைப்புகள் அனைத்தையும் அவற்றின் வியத்தகு இணைப்புகளோடு இணைந்து இயங்கச் செய்யவும் வல்லமையுள்ளதுமாயிருக்கிறது.
படைப்புகளின் அழகை அனுபவிக்கும் வாய்ப்பு உனக்கிருப்பதால், ‘எல்லாம் அவருக்குள் நிலை நிற்கிறது” (கொலோ. 1:17) என்பதையும் நினைவில் கொள். இயேசுவே எல்லா படைப்புகளுக்கும், அவற்றின் பராமரிப்புக்கும் காரணர் என்பதை உணரும்போது நம் உள்ளத்தில் எழும் மகிழ்ச்சியோடு நாம் அவரைப் போற்றி புகழ்வோம். அவருடைய படைப்புகளின் தேவைகளையெல்லாம் அவரே தருகின்றார் என்பதையும் நினைத்துப் போற்றுவோம்.
தேவனுடைய படைப்புகளில் எவற்றைப் பார்க்கும்போது அவரைப் போற்றத் தோன்றுகின்றது? இயேசுவே இப்புவியையும் அதிலுள்ள அனைத்தையும் பராமரிக்கின்றார் என்பது உன்னை எவ்வாறு ஊக்கப்படுத்துகின்றது?