கூட்டம் நிறைந்துள்ள ஒரு விமான நிலையத்தில், ஓர் இளம் தாய் தனிமையாகப் போராடிக் கொண்டிருந்தார். அவளுடைய சிறிய குழந்தை கோபத்தில் இருந்தது. அது கத்திக் கொண்டும், உதைத்துக் கொண்டும், விமானத்திற்குள் ஏற மறுத்தும், முரட்டாட்டம் பண்ணிக் கொண்டிருந்தது. தன்னால் தாங்க முடியாமல் தவித்த அந்த கர்ப்பிணியானத் தாய், கடைசியாக கைவிட்டாள். வெறுப்படைந்தவளாய் தரையில் உட்கார்ந்து தன் முகத்தை மூடிக் கொண்டு விம்மி அழ ஆரம்பித்தாள்.
உடனடியாக ஆறு அல்லது ஏழு முன்னறிமுகமில்லாத பெண் பிரயாணிகள் அந்தப் பெண்ணையும், குழந்தையையும் சூழ்ந்துகொண்டனர். தின்பண்டங்களைக் கொடுத்தனர், தண்ணீர் கொடுத்தனர், அன்போடு அணைத்துக் கொண்டனர், ஒரு குழந்தைக்கான பாடலையும் பாடினர். அவர்களின் அன்பும் அரவணைப்பும் அந்தக் குழந்தை அமைதியாக அமர்ந்தது. அனைத்துப் பெண்களும் தங்கள் இருக்கைக்குத் திரும்பினர். அவர்கள் தாங்கள் என்ன செய்தோமென விவாதிக்கவில்லை. ஆனால், தங்களின் உதவி சரியான நேரத்தில் அந்த இளம்தாயை பெலப்படுத்தியது என்று தெரிந்துகொண்டனர்.
இந்தக் காட்சி சங்கீதம் 125ல் காட்டப்பட்டுள்ள அழகிய உண்மையை விளக்கிக் காட்டுகின்றது. வசனம் 2ல் ‘கர்த்தர் இது முதல் என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிறார்” இது சுறுசுறுப்பான எருசலேம் நகரம் எவ்வாறிருக்கும் என்பதை நமக்கு நினைப்பூட்டுகின்றது. எருசலேம், ஒலிவமலை, சீயோன் மலை, மோரியா மலை என அநேக மலைகளால் சூழப்பட்ட ஒரு நகரம்.
இதே போன்று தேவன் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் அவர்களுக்குப் பாதுகாப்பாகவும், உறுதுணையாகவும் இருந்து அவர்களின் ஆத்துமாவைப் பாதுகாக்கின்றார். ‘இது முதல் என்றென்றைக்கும் பாதுகாக்கின்றார். கடினமான நாட்களிலும் ‘எனக்கொத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்” (சங். 121:1) என்று சங்கீதக்காரன் கூறுவது போல தேவனை நோக்கிப் பார். தேவன் உறுதியான உதவிகளோடு காத்திருக்கின்றார். நிலையான நம்பிக்கையைத் தருகின்றார். அவர் மாறாத அன்புடையவர்.
தேவன் தன்னுடைய அன்பினால் உன்னைச் சூழ்ந்துள்ளதை எவ்வாறு உணர்கின்றாய்? இன்று யாரோடு அவருடைய அன்பினைப் பகிர்ந்து கொள்ளப்போகின்றாய்?