மிகவும் புத்திசாலியான வின்னி, அடிக்கடி சொல்வது, ‘நீ பேசிக் கொண்டிருக்கும் நபர், உன் பேச்சைக் கவனிக்கவில்லையெனில், பொறுமையாயிரு. ஒருவேளை, ஏதோவொரு தூசு அல்லது துகள் அவனுடைய காதை அடைத்துக் கொண்டிருக்கலாம்.”

பல ஆண்டுகளில் வின்னியிடமிருந்து நான் ஒன்றைத் தெரிந்துகொண்டேன். நீ கூறுவது அவர்களுக்கு பயனுள்ளதாகயிருந்தாலும் அதை அவர்கள் கவனித்துக் கேட்க வில்லையெனில் ஏதோ ஒன்று அவர்களைக் கேட்கவிடாமல் தடுக்கின்றது. ஒரு சிறிய துகள் அவர்கள் காதுகளை அடைக்கின்றது அல்லது வேறொரு காரணமும் இருக்கலாம். சிலருக்கு கவனிப்பதென்பது இயலாததாகிவிடுகின்றது. ஏனெனில், அவர்கள்; தங்கள் பிரச்சனைகளால் உடைந்து, வலுவிழந்து காணப்படுகின்றனர்.

இஸ்ரவேல் ஜனங்களிடம் மோசே பேசுகின்றார். ஆனால், அவர்கள் கவனிக்கவில்லை. ஏனெனில், அவர்களின் ஆவி சோர்வடைந்து காணப்படுகின்றது. அவர்களின் வாழ்வு கடினமாயிருக்கிறது (யாத். 6:9). இஸ்ரவேலர் எகிப்தில் தங்கள் ஜீவன் கசந்து போகுமட்டும் அடிமைத்தனத்தில் கஷ்டங்களைச் சகித்தனர். இந்த கஷ்டங்களின் பலனால் சோர்வடைந்தனர். அதனாலேயே இஸ்ரவேலர் மோசேயின் அறிவுரைக்குச் செவிகொடுக்கவில்லை. மோசேயின் கரிசனையையும் புரிந்துகொள்ளலையும் அவர்களால் கவனிக்க முடியவில்லை. அதனால் இஸ்ரவேலர் மோசேயின் அறிவுரையை நிராகரித்தனர் என்றும் சொல்ல முடியாது.

நாம் கூறுவதை பிறர் கவனிக்காவிடில் நாம் என்ன செய்ய வேண்டும்? அறிவாளியான வின்னியின் வார்த்தைகள் பதிக்கப்பட வேண்டிய வார்த்தைகள். ‘பொறுமையாயிரு” தேவன் சொல்வதென்னவெனில், ‘அன்பு, நீடிய சாந்தமும் பொறுமையுள்ளது” (1 கொரி. 13:4). அது பொறுமையாய் காத்திருக்கும். தேவன் தன்னுடைய வேலையை அத்தோடு முடித்துவிடவில்லை. அவர்களுடைய துயரத்தில் நம்முடைய அன்பினாலும், ஜெபத்தினாலும் கிரியை செய்கின்றார். அவருடைய வேளை வரும்போது அவர்கள் கேட்கும்படி தேவன் அவர்களின் செவிகளைத் திறப்பார். அதுவரை பொறுமையாயிரு.