தன்னுடைய குழு ஒரு சரித்திரத்தை ஏற்படுத்தக்கூடிய அந்த கடைசி நேரத்தில், ஐயோவா பல்கலைக்கழகத்தின் மிகச்சிறந்த கூடைப்பந்து விளையாட்டு வீரர் ஜோர்டன் பொகனன் தடையில்லா ஓர் பந்து எறிதலை வேண்டுமென்றே தவறவிட்டு, தன் பள்ளியின் 25 வருட ரெக்கார்டை முறியடிப்பதை விட்டுவிட்டான். ஏன்? 1993 ஆம் ஆண்டு ஐயோவாவின் கிறிஸ்ட்ரீட் குழுவில் முப்பத்துநான்கு தடையில்லா பந்து எறிவுகளை தொடர்ந்து போட்டான்.. பின்னர் அவன் ஒரு கார் விபத்தில் மரித்துப் போனான். போகனன் ஸ்டீரிட்டை கௌரவித்து மகிழ்ந்தானேயன்றி, தன்னுடைய பள்ளிப் பதிவை முறியடிக்க விரும்பவில்லை.
போகனன் தன்னுடைய சொந்த முன்னேற்றத்தைவிட, சில விழிப்புணர்வை ஏற்படுத்தும் காரியங்களுக்கு அதிக கவனம் செலுத்தினான். இதே போன்ற மதிப்பீடுகளை இளம் வீரரான தாவீதின் வாழ்விலும் காணலாம். ஒரு குகையில் தன்னுடைய தரமற்ற படைகளோடு ஒளிந்திருந்த தாவீது, தன்னுடைய சொந்த ஊரான பெத்லகேமின் கிணற்று நீரைப் பருக ஏங்கினான். ஆனால், அந்தப் பகுதி பெலிஸ்தரின் கைவசமிருந்தது (2 சாமுவேல் 23:14-15).
தாவீதின் மூன்று யுத்த வீரர்கள் பெலிஸ்தரின் எல்லைக்குள் துணிந்து புகுந்து, அந்தக் கிணற்று நீரை மொண்டு தாவீதுக்குக் கொண்டு வந்தனர். ஆனால், தாவீதால் அந்த நீரைப் பருக முடியவில்லை. ‘அவன் அதைக் குடிக்க மனதில்லாமல், அதைக் கர்த்தருக்கென்று ஊற்றிப் போட்டான்” அவன், ‘கர்த்தாவே, தங்கள் பிராணனை எண்ணாமல் போய்வந்த அந்த மனுஷரின் இரத்தத்தைக் குடிக்கும் இச்செயல் எனக்குத் தூரமாயிருப்பதாக” என்றான் (வச. 16-17).
தங்களுக்கு அகப்பட்டதையெல்லாம் கையகப்படுத்திக் கொள்வதையே பாராட்டும் இந்த உலகில் அன்பினாலும், தியாகத்தாலும் நிறைவேற்றப்படும் செயல்கள் எத்தனை வல்லமையுள்ளவை! அத்தகைய செயல்கள் ஓர் அடையாளத்தை ஏற்படுத்துவதைக் காட்டிலும் மேலானவை.
உன்னுடைய சொந்த செயல்திட்டங்களை நிறைவேற்றுவதைக் காட்டிலும், பிறருடைய முயற்சியையும் செயலையும் எவ்வாறு பாராட்டலாம்? நம்முடைய அன்பின் செயல்கள் எவ்வாறு தேவ சித்தத்தை வெளிப்படுத்துகின்றன?