ஒரு டெலிவிஷன் நிகழ்ச்சியில், நடுத்தர வயதினர் உயர்நிலைப்பள்ளி மாணவர்களைப் போல நடித்தனர். இளைஞர்களின் வாழ்வை நன்கு புரிந்துகொள்வதற்காக அப்படிச் செய்தனர். இளைஞர்கள் தங்களுடைய சுயமதிப்பை அளப்பதில் சமுதாயத் தொடர்பு சாதனங்கள் முக்கிய பங்குவகிக்கின்றன. இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஒரு நபர், ‘மாணவர்களின் சுயமதிப்பு, தொடர்பு சாதனங்களோடு இணைந்துள்ளது. தங்களுடைய ஒரு புகைப்படத்திற்கு எத்தனை ‘விருப்பங்கள்” கொடுக்கப்பட்டுள்ளன என்பதையே அது சார்ந்துள்ளது” என்றார். மற்றவர்கள் தங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதன் தேவை, இளைஞர்களை அதிக நேரம் வலைதளங்களில் தொடர்புகொள்ளத் தூண்டுகின்றது.
நாம் மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற ஏக்கம் எப்பொழுதும் இளைஞர்களுக்குள் இருக்கின்றது. ஆதியாகமம் 29ல் லேயாள், தன்னுடைய கணவன் யாக்கோபின் அன்பினைப் பெற ஏங்குவதைப் புரிந்துகொள்ள முடிகின்றது. இதன் வெளிப்பாட்டை தன்னுடைய முதல் மூன்று குமாரரின் பெயர்களிலிருந்து அறிந்து கொள்ளலாம். அத்தனையும் அவளுடைய தனிமையை வெளிக்காட்டுகின்றன (வச. 31-34). ஆனால், வருத்தத்திற்குரியது என்னவெனில், யாக்கோபு தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவள் எதிர்பார்த்த எண்ணம் நிறைவேறியதாகத் தெரியவில்லை.
லேயாளுக்கு நான்காவது மகன் பிறந்தபோது அவள் தன் கணவனிடமல்ல, தேவனிடம் திரும்பி, தன் மகனுக்கு யூதா என்று பெயரிடுகின்றாள். அதற்கு ‘கர்த்தரைத் துதிப்பேன்” என அர்த்தம் (வச. 35). லேயாள் தனக்குரிய முக்கியத்துவம் தேவனிடம் இருக்கிறது என்பதைக் கண்டு கொண்டாள். அவள் தேவனுடைய இரட்சிப்பின் வரலாற்றில் இடம் பெறுகின்றாள். தாவீது அரசனின் முன்னோர்களின் பட்டியலில் யூதா இடம்பெறுகின்றார். பின்;னர் இயேசு கிறிஸ்துவும் தாவீதின் வம்சத்தில் தோன்றுகின்றார்.
நாமும் நம்முடைய முக்கியத்துவத்தைப் பெற பலவகைகளில், பல வழிகளில் முயற்சிக்கலாம். ஆனால் இயேசு கிறிஸ்துவின் மூலமாக மட்டுமே, நாம் தேவனுடைய பிள்ளைகள், இயேசு கிறிஸ்துவின் சந்ததியின், பரலோகத் தந்தையோடு நித்தியமாக வாழப் போகின்றவர்கள் என்ற அடையாளத்தைப் பெற முடியும். பவுல் எழுதுவது போல, ‘என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக் கொண்டிருக்கிறேன்” என்று நாமும் சொல்வோமாக (பிலி. 3:8).
எதில் அல்லது யாரால் நீ ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் அல்லது மதிக்கப்பட வேண்டுமென போராடிக் கொண்டிருக்கின்றாய்? இயேசுவின் பேரிலுள்ள நம்பிக்கை, உன்னுடைய முழு அடையாளத்தையும் காண எப்படி கதவைத் திறக்கின்றது?