ஐரோப்பா கண்டத்திலேயே மிகவும் ஏழ்மையான நாடான மால்டோவாவிற்கு என்னுடைய சிநேகிதி சென்றிருந்தபோது, அங்குள்ள கிறிஸ்தவர்கள் அவர்களுக்குக் கொடுத்த மலர்ந்த வரவேற்பில் அகமகிழ்ந்து போனாள். ஒருமுறை அவள் சில துணிகளையும், வீட்டிற்குத் தேவையான சில பொருட்களையும் வாங்கிக் கொண்டு அங்குள்ள ஆலயத்தின் உறுப்பினரான ஓர் ஏழைத் தம்பதியினரைக் காண அவர்கள் இல்லத்திற்குச் சென்றபோது, அங்கு அவர்கள் அநேகக் குழந்தைகளைத் தத்தெடுத்து, பராமரித்து வருவதைக் கண்டு ஆச்சரியப்பட்டாள். அந்தத் தம்பதியினர் என்னுடைய சிநேகிதியை இன்முகத்தோடு வரவேற்று, டீ வழங்கினர். அத்தோடு சில தின்பண்டங்களையும் கொடுத்தனர். மேலும் தர்பூசணி, மேலும் சில பழவகைகள், காய்கனிகளை அவளுக்குக் கொடுத்து வழியனுப்பிவைத்தனர். அவர்களுடைய உபசரணையைப் பார்த்து வியந்துபோனாள்.
தேவன் தம் ஜனங்களாகிய இஸ்ரவேலரிடம் அந்நியரை உபசரிக்கும்படி சொன்னதை இந்த விசுவாசிகள் செயலில் காட்டுகின்றனர். தேவன் அவர்களிடம், ‘நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளிளெல்லாம் நடந்து, அவரிடத்தில் அன்பு கூர்ந்து, உன் முழு இருதயத்;தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவித்து… (உபா. 10:12) என்பதாகக் கூறியுள்ளதை இஸ்ரவேலர் எவ்வாறு செயலில் காட்ட வேண்டும்? இன்னும் சில வசனங்களுக்கப்பால் இதற்கான பதில் வருகிறது. ‘நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியராயிருந்தபடியால், அந்நியரைச் சிநேகிப்பீர்களாக” (வச. 19). அந்நியரை வரவேற்கும் போது அவர்கள் தேவனுக்குப் பணிசெய்து, அவரைக் கனம் பண்ணுகின்றனர். அந்நியரிடம் அன்பையும், கரிசனையையும் காண்பிப்பதால் தேவன் மீதுள்ள நம்பிக்கையை அவர்களுக்கு வெளிப்படுத்துகின்றனர்.
மால்டோவர்களிடமிருந்தும், இஸ்ரவேலிடமிருந்தும் நம்முடைய சூழ்நிலைகள் வேறுபட்டு காணப்படலாம். ஆனால் பிறரை உபசரிப்பதன் மூலம் தேவன் மீதுள்ள அன்பினைக் காட்ட முடியும். நம்முடைய வீட்டைப் பிறருக்குத் திறந்து கொடுப்பதன் மூலமாகவும், நம் எதிரே வருபவர்களிடம் புன்னகையோடு வாழ்த்து தெரிவிப்பதன் மூலமாகவும், தேவனுடைய அன்பைக் காட்டலாம். ஒருவரையொருவர் காயப்படுத்தும், தனிமைப்படுத்தும் இவ்வுலகில் தேவனுடைய கரிசனையையும், உபசரணையையும் காட்டுவோம்.
விசுவாசிகள் தேவனுடைய அன்பினை தங்களுடைய வரவேற்கும் குணத்தால் காட்டமுடியும்.