1995 ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பங்கு சந்தையின் முதலீட்டாளர்கள் மிக அதிகமான பலனைப் பெற்றனர். சராசரியாக 37:6 சதவீத அபார பலனைத் தந்தது. 2008 ஆம் ஆண்டில் முதலீட்டாளர்கள் அதே அளவு இழப்பைச் சந்தித்தனர். அதாவது 37.0 சதவீதம் இழப்பு. இவற்றிற்கிடையேயுள்ள வருடங்களில் மாறுபட்ட பலன் கிடைத்தது. சந்தையில் பணத்தோடுள்ளவர்கள் சிலவேளைகளில் அதிசயிக்கும் வண்ணமும், சிலவேளை பயப்படும் வகையிலும் இருந்தது.
தங்களுடைய வாழ்வை இயேசுவுக்காக முதலீடு செய்பவர்களுக்கு நம்பமுடியாத அளவு பிரதிபலன் கிடைக்குமென, இயேசு தம் சீடர்களுக்கு உறுதியளித்துள்ளார். அவர்கள், ‘எல்லாவற்றையும் விட்டு உம்மைப் பின்பற்றினோமே” (வச. 28) என்று சொல்லத் தொடங்கினர். தங்கள் வீட்டையும், வேலையையும் அந்தஸ்தையும், குடும்பத்தையும் விட்டுத் தங்கள் வாழ்வை இயேசுவுக்காக முதலீடு செய்தனர் (வச.28). செல்வந்தனான ஒருவன் உலக ஆஸ்தியின் மீதுள்ள பற்றுதலை விட்டுவிட மனதில்லாதிருந்ததைக் கண்டபோது, தங்களுடைய முதலீடும் பலனற்றதாகிவிடுமோ என எண்ணத் தொடங்கினர். இயேசு அவர்களை நோக்கி, யாராகிலும் இயேசுவுக்காக தியாகம் செய்ய தயாராக இருந்தால் அவன், ‘இம்மையிலே துன்பங்களோடே கூட நூறத்தனையாக வீடுகளையும் சகோதர சகோதரிகளையும்… மறுமையிலே நித்திய ஜீவனையும் அடைவான்” (வச. 30) என்று சொன்னார். இந்த பிரதிபலன் எந்த பங்குச் சந்தையாலும் கொடுக்கக்கூடாத மிகப் பெரிய பலனாகும்.
நம்முடைய ஆவிக்குரிய வாழ்வில் நம்முடைய முதலீட்டின் வட்டி விகிதத்தைக் குறித்துக் கவலைகொள்ள வேண்டாம். தேவன் எதனோடும் ஒப்பிடமுடியாத உறுதியைத் தருகின்றார். பணத்தைக் கொண்டு மிக அதிகமான பொருளாதார லாபத்தைப் பெற நாம் முயற்சிக்கின்றோம். ஆனால், தேவன் நமக்குத் திருப்பித்தருவதோ டாலர் மதிப்புகளால் அளவிட முடியாதவை. அவரை அறிந்து கொள்வதால் வரும் மகிழ்ச்சி இப்பொழுதும், எப்பொழுதும் நிலையானது. அதனை நாம் பிறரோடு பகிர்ந்துகொள்ள முடியும்.
கிறிஸ்துவுக்காக வாழ்வதே விலையேறப்பெற்ற முதலீடு.