Archives: பிப்ரவரி 2019

தள்ளிவிட்டு, முன்னேறு

வானொலி செய்திபரப்புனராகப் பணியாற்றி வந்த நண்பர் ஒருவர் எனக்குக் கொடுத்த ஓர் அறிவுரை என் நினைவிற்கு வந்தது. அவருடைய வாழ்வின் ஆரம்ப நாட்களில், விமர்சனங்களையும், பாராட்டுகளையும் எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த போது, தேவன் அவை இரண்டையுமே தள்ளிவிட்டுவிட ஊக்குவிப்பதாக உணர்ந்தார். அவன் எவற்றை தன் இருதயத்தினுள் வைத்திருக்கின்றானோ அது அவனைப் பாதிக்கும் எனவே விமர்சனங்களிலிருந்து கற்றுக் கொண்டும், பாராட்டுகளை ஏற்றுக்கொண்டும், இரண்டையும் இருதயத்தினுள் வைத்துக் கொள்ளாமல் தள்ளிவிட்டு தேவனுடைய கிருபையாலும் வல்லமையாலும் தாழ்மையாக முன்னேறு.

விமர்சனமும், பாராட்டும் நம்முடைய உயர்வுகளைத் தூண்டிவிடும். நாம் அவற்றைத் தடுக்காவிடின் வெறுப்பிற்கும் தனக்கு மிஞ்சிய கர்வத்திற்கும் வழிவகுக்கும். ஊக்கப்படுத்துதலையும் ஞானமுள்ள ஆலோசனைகளைத் தருவதையும் பற்றி நீதிமொழிகளில் காண்கின்றோம். 'நற்செய்தி எலும்புகளைப் புஷ்டியாக்கும்; ஜீவனுக்கேதுவான கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளும் காது ஞானிகளிடத்தே தங்கும். புத்திமதியைத் தள்ளிவிடுகிறவன் தன் ஆத்துமாவை வெறுக்கிறான்; கடிந்து கொள்ளுதலைக் கேட்கிறவனோ ஞானமடைவான் (15:30-32).

நாம் ஏதோ ஓரிடத்தில் கடிந்துகொள்ளப்படும் போது, நாம் அதனை நம்மைச் சரிபடுத்திக்கொள்ள பயன்படுத்த வேண்டும். நீதிமொழிகள் இதனையே 'ஜீவனுக்கேதுவான கடிந்து கொள்ளுதலை ஏற்றுக்கொள்ளும் காது ஞானிகளிடத்தே தங்கும்" (வச. 31) எனக் கூறுகின்றது. ஒரு வேளை நாம் பாராட்டப்படும் போது வார்த்தைகளால் ஆசீர்வதிக்கப்பட்டால் நாம் புத்துணர்ச்சியைப் பெற்று நன்றியால் நிரப்பப்படுவோம். நாம் தேவனோடு தாழ்மையாய் நடந்தால், விமர்சனங்களிலிருந்தும் பாராட்டுகளிலிருந்தும் கற்றுக்கொள்ள அவர் உதவுவார். இரண்டையும் தள்ளிவிட்ட தேவனோடுள்ள உறவில் வளரவும் தேவன் உதவுவார் (வச. 33).

ஜெபமும் வளர்ச்சியும்

என்னுடைய நண்பன் டேவிட்டின் மனைவி அல்சைடன் (நினைவை இழத்தல்) வியாதியினால் தாக்கப்பட்ட போது அவனுடைய வாழ்வு பெரிதும் பாதிப்புக்குள்ளானது. அவன் தன் மனைவியை கவனிக்கும்படி தன் வேலையிலிருந்து கட்டாய ஓய்வு வாங்க வேண்டியதாயிற்று. அந்த வியாதி மேலும் மேலும் அதிகரிக்க, அவளுக்கு இன்னும் அதிக கவனம் தேவைப்பட்டது.

''நான் தேவன் மீது கோபத்திலிருக்கின்றேன்" என்றான். ''நான் எவ்வளவுக்கதிகமாக ஜெபிக்கின்றேனோ, அவ்வளவுக்கதிகமாய், தன்னலத்தோடு வாழ்கின்ற என்னுடைய இருதயத்தைக் குறித்துக் காண்பிக்கின்றார்" என்றான். கண்ணீர் அவனுடைய கண்களைக் குளமாக்கின. 'அவள் பத்து ஆண்டுகளாக சுகவீனமாக இருக்கின்றாள். தேவன் என்னை காரியங்களை வேறு விதமாகப் பார்க்கச் செய்கின்றார். நான் இப்பொழுது எல்லாவற்றையும் அன்பினாலேயே செய்கின்றேன். மேலும் அவற்றை இயேசுவுக்காகச் செய்கின்றேன். அவளை கவனிப்பதே என் வாழ்வின் மிகப் பெரிய கொடையாகவுள்ளது" என்றான்.

சில வேளைகளில் தேவன் நம்முடைய ஜெபங்களில் நாம் கேட்கின்றவற்றின் பதிலை கொடுக்காமல் நம்மை மாற்றும்படியாகச் செயல்படுகின்றார். தேவன் பொல்லாப்பு நிறைந்த நினிவே பட்டணத்தை அழிக்காமல் விட்டபோது தீர்க்கதரிசி யோனாவிற்கு கோபம் வந்தது. தேவன் யோனாவிற்கு நிழல் தரும்படி ஓர் ஆமணக்குச் செடியை முளைக்கச் செய்தார் (யோனா 4:6). பின்னர் அதனை காய்ந்து போகச் செய்தார். யோனா அதனைக் குறித்து குற்றம்சாட்டிய போது தேவன், 'நீ ஆமணக்கினிமித்தம் எரிச்சலாயிருக்கிறது நல்லதோ?" என்றார். யோனா தன்னைக் குறித்து மட்டுமே சிந்திக்கின்றான். எனவே ''நல்லது" என்கின்றான். ஆனால், தேவன் அவனைப் பிறரைக் குறித்துக் சிந்திக்கச் செய்கின்றார். பிறர் மீது கரிசனைகொள்ளச் செய்கின்றார்.

தேவன் சில வேளைகளில் நம்முடைய ஜெபங்களை, நாம் எதிர்பாராத விதமாக பதிலளித்து, நாம் இந்த மாற்றத்தை திறந்த உள்ளத்தோடு ஏற்றுக்கொள்வோம், ஏனெனில், அவர் நம்மை அவருடைய அன்பினால் மாற்ற விரும்புகின்றார்.

ஊக்கப்படுத்தும் சுற்றுச் சூழல்

எங்கள் வீட்டினருகிலுள்ள உடற்பயிற்சி மையத்திற்குச் செல்லும் போதெல்லாம் நான் அதிகம் ஊக்குவிக்கப்படுவேன். அந்த விறுவிறுப்பான இடத்தில் நான் எப்பொழுதும் தங்களின் உடல் நிலையையும், உடல் வலுவையும் மேம்படுத்திக் கொள்ள முயற்சிக்கும் மக்களால் சூழப்பட்டிருப்பேன். ஒருவரையொருவர் தீர்ப்பிடாதேயுங்கள் என்ற சிந்தனையைத் தரும் குறிப்புகளும், பிறரின் முயற்சியை வரவேற்கும் வார்த்தைகளும், ஆங்காங்கே காணப்படும்.

நம்முடைய ஆவிக்குரிய வாழ்வின் எல்லையெங்கும் எப்படிப்பட்ட காரியங்கள் காணப்பட வேண்டும் என்பதைக் குறித்து இது ஒரு நல்ல காட்சியைத் தருகிறது. ஆவியில் நல்ல முதிர்ச்சியைப் பெறும்படியும், தம்முடைய விசுவாசத்தில் வளரும்படியும் போராடிக் கொண்டிருப்பவர்களும் சில வேளைகளில் மற்றவர்களைப் பார்த்து, தங்களைக் குறித்து விசுவாசக் கூட்டத்தோடு சேர தகுதியற்றவர்களாகவும் இயேசுவோடு கூட நடப்பதில் முதிர்ச்சி பெறாதவர்களாகவும் கருதலாம்.

பவுல் நமக்கு ஒரு சிறிய வழிமுறையைத் தருகின்றார். 'ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்" (1 தெச. 5:11) என்கின்றார். ரோமாபுரியிலுள்ள விசுவாசிகளுக்கு, நம்மில் ஒவ்வொருவரும் பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன் (ரோம. 15:2) என எழுதுகின்றார். நம்முடைய தந்தையின் அன்பு மிகுந்த கிருபையை உணர்ந்தவர்களாய், நாமும் தேவனுடைய கிருபையை பிறரிடம் நம்முடைய ஊக்கப்படுத்தும் வார்த்தையாலும், செயலாலும் காண்பிப்போமாக.

'நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள் (வச. 7) என்ற வார்த்தையின்படி நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சியை தேவனிடம் ஒப்படைத்து, அவருடைய ஆவியின் நடத்துதலுக்கு கீழ்ப்படிவோம். இவ்வாறு நாம் ஒவ்வொரு நாளும் அவரைப் பின்பற்றும் போது, இயேசுவுக்குள் நம்முடைய சகோதர, சகோதரிகளுக்கு விசுவாசத்தில் வளரும்படி ஊக்கத்தைத் தரக்கூடிய ஒரு சூழலை உருவாக்கிக் கொடுப்போம்.

கனிவான செயல்கள்

'எஸ்தர், உனக்கு நம்முடைய சிநேகிதி ஹெலனிடமிருந்து ஒரு பரிசு வந்தள்ளது" என பணியை முடித்து வீடு திரும்பிய என் தாயார் என்னிடம் கூறினார்கள். நாங்கள் வளர்ந்த பின்னர் பரிசுகள் அதிகம் வருவதில்லை. எனவே ஒரு பரிசை தபாலில் பெறுவது இரண்டாவது கிறிஸ்மஸ் போன்று மகிழ்ச்சியாக இருந்தது. இந்த அருமையான பெண்ணின் மூலம் தேவன் என்னையும் நேசிக்கின்றார், நினைக்கின்றார், என்னை கனப்படுத்தியுள்ளார்.

அந்த ஏழை விதவை தபித்தாள் (தொற்காள்) என்னைப் போன்ற அநேகருக்கு உடைகளை தயாரித்துக் கொடுத்தாள். அவள் யோப்பா பட்டணத்தில் வாழ்ந்து, இயேசுவைப் பின்பற்றி வந்த ஒரு பெண். அவளுடைய சமுதாயம் அவளின் அன்பின் கிரியைகளை நன்கு அறிந்திருந்தது. அவள் நற்கிரியைகளையும், தருமங்களையும், மிகுதியாகச் செய்து வந்தாள் (அப். 9:36). அவள் சுகவீனமாகி, மரித்துப்போனாள். அப்பொழுது பேதுரு அருகிலுள்ள ஒரு பட்டணத்திற்கு வந்திருந்தார். எனவே இரண்டு விசுவாசிகள் அவரிடம் சென்று அவரை யோப்பா பட்டணத்திற்கு வரும்படி வருந்திக் கேட்டுக்கொண்டனர்.

பேதுரு அங்கு வந்த போது விதவைகளெல்லாரும் 'தொற்காள் தங்களுடனே கூட இருக்கையில் செய்திருந்த அங்கிகளையும் வஸ்திரங்களையும் காண்பித்து..." (வச. 39) அவளுடைய கனிவான செயல்களை எடுத்துரைத்தனர். அவர்கள் பேதுருவிடம் செயல்படுமாறு கேட்டதாகத் தெரியவில்லை. ஆனால், பரிசுத்த ஆவியின் ஏவுதலால் பேதுரு ஜெபித்தார். தேவன் அவளை உயிர் பெறச் செய்தார். தேவனுடைய இரக்கம் அதைச் செய்தது. 'இது யோப்பா பட்டணம் எங்கும் தெரிய வந்தது. அப்பொழுது அநேகர் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்" (வச. 42).

நாமும் நம்மைச் சுற்றியிருப்பவர்களிடம் கனிவாக நடந்து கொண்டால், அதன் மூலம் அவர்கள் தேவனிடம் திருப்பப்படுவர். தேவனால் கனம் பெறுவர்.