பத்து வயது நிரம்பிய வயோலா ஒரு மரக் கொப்பை மைக்ரோபோன் போல பாவித்து, ஒரு போதகரைப் போன்று பிரசங்கம் செய்து கொண்டிருந்ததை கவனித்த மிச்சேல், கிராம ஊழியத்தின் போது வயோலாவிற்கு பிரசங்கம் செய்ய ஒரு வாய்ப்பளிக்கத் தீர்மானித்தாள். வயோலாவும் அதற்குச் சம்மதித்தாள். மிச்சேல், தெற்கு சூடானில் ஊழியம் செய்யும் ஒரு மிஷனரி. ‘அந்தக் கூட்டம் அதிக மகிழ்ச்சியினால் நிரப்பப்பட்டது… கைவிடப்பட்ட ஒரு சிறு பெண் அந்தக் கூட்டத்தினருக்கு முன்பாக ராஜாதி ராஜாவின் மகளாக அதிகாரத்தோடு நிற்கின்றாள். தேவனுடைய இராஜ்யத்தின் உண்மையை வல்லமையாக, அவர்களோடு பகிர்ந்து கொள்கின்றாள். பாதி கூட்டத்தினர் இயேசுவை தங்களுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ள முன் வந்தனர்” என்று மிச்சேல் தன்னுடைய ‘அன்பிற்கு ஒரு முகமுண்டு” என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளாள். அந்தக் கூட்டத்தினர். அன்று ஒரு குழந்தையின் வாயினால் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படும் என எதிர்பார்க்கவில்லை. இந்த நிகழ்வு என்னுடைய மனதில் சங்கீதம் 8ல் காணப்படுகின்ற ‘குழந்தைகள், பாலகர் வாயினால்” என்ற சொற்றொடரை நினைவிற்குக் கொண்டு வந்தது. தாவீது ‘உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள், பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணினீர்” என எழுதுகின்றார் (8:2). இதனையே இயேசு மத்தேயு 21:16ல் குறிப்பிடுகின்றார். தேவாலயத்தில் ஆர்ப்பரிக்கின்ற பிள்ளைகளை பிரதான ஆசாரியரும், வேதபாரகரும் கண்டு கோபமடைந்தபோது இயேசு இந்த வசனத்தை அவர்களுக்குச் சுட்டிக் காட்டுகின்றார். அந்த தலைவர்களுக்கு குழந்தைகள் இடறுதலாகக் காணப்பட்டனர். ஆனால், இயேசு அவர்களுக்கு வேத வாக்கியத்தைச் சுட்டிக் காண்பித்து, தேவன் குழந்தைகளின் துதியைப் பெரிதாகக் கருதுவதாகக் கூறுகின்றார். அந்தத் தலைவர்கள் செய்வதற்கு மறுத்த ஒன்றை குழந்தைகள் நிறைவேற்றினர். தாங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த மேசியாவை குழந்தைகள் மகிமைப்படுத்தினர்.
வயோலாவும் தேவாலயத்தில் இருந்த குழந்தைகளும் காண்பித்தது போல, தேவன் ஒரு சிறு குழந்தையைக் கூட தனக்கு மகிமையுண்டாக பயன்படுத்த முடியும். குழந்தைகளின் உள்ளத்திலிருந்து மனமார்ந்த துதி வெள்ளம் போல வந்தது.
இன்று நான் எப்படி தேவனை மகிமைப்படுத்தலாம்?
ஏன் அவர் என்னுடைய துதிக்குப் பாத்திரராயிருக்கிறார்?