என்னுடைய வாழ்வில் அடிக்கடி பரபரப்பையும், வெறித்தனத்தையும் உணருகின்றேன். நான் ஒரு வேலையிலிருந்து மற்றொன்றிற்கு வேகமாக மாறுகிறேன், அவசரமாக அலைபேசி அழைப்புகளில் பேசுவதும், போகின்ற வழியிலேயே. அன்று முடிக்கப்படவேண்டிய வேலைகளின் நீண்டபட்டியலை சரிபார்ப்பதுமாக இருப்பேன். மிகவும் சோர்வடைந்த நிலையில் ஒரு ஞாயிறு, எங்கள் வீட்டின் பின்புறம் அமைந்துள்ள ஊஞ்சல் படுக்கையில் சாய்ந்தேன். என்னுடைய கைப்பேசி வீட்டிலிருந்தது, என்னுடைய குழந்தைகளும் கணவரும் வீட்டிலிருந்தனர். நான் ஒருசில நிமிடங்கள் மட்டுமே உட்கார்ந்து விட்டு செல்லலாம் என்று அங்கு வந்தேன். ஆனால், அங்கிருந்த தடையில்லாத அமைதி, நான் அங்கு கண்ட காட்சிகளை மேலும் மேலும் பார்க்கத் தூண்டியது. என்னுடைய ஊஞ்சல் படுக்கையின் அசைவினால் ஏற்பட்ட மெல்லிய சத்தத்தையும், அருகிலுள்ள லாவண்டர் மலர்களைச் சுற்றிக் கொண்டிருந்த தேனீக்களின் ரீங்காரத்தையும், எனக்கு மேலே பறந்த பறவைகளின் இறக்கையொலியையும் என்னால் கேட்க முடிந்தது. பிரகாசமான நீல வானில், காற்றில் அடித்துச் செல்லப்பட்ட மேகங்களையும் கண்டு வியந்தேன்.
தேவன் படைத்த அனைத்தையும் பார்த்தபோது என் கண்கள் கண்ணீரால் நிரம்பிற்று. என் கண்களின் வழியேயும், செவியின் வழியேயும் இத்தனை அதிசயமான காரியங்களைப் பார்க்கவும், கேட்கவும் நான் அதிக நேரத்தைக் கொடுத்தபோது, நன்றி நிறைந்த உள்ளத்தோடு, தேவனுடைய படைப்பின் வல்லமையை வியந்து, ஆராதிக்க ஆரம்பித்தேன். சங்கீதம் 104ஐ எழுதியவரும், தேவனுடைய கரத்தின் கிரியைகளைக் கண்டு வியந்து, தன்னைத் தாழ்த்தி, ‘உமது கிரியைகளின் பலனாலே பூமி திருப்தியாயிருக்கிறது” என்கின்றார் (வச. 13).
ஓர் அவசரமான வாழ்வின் நடுவில், ஓர் அமைதியான நேரம் தேவனுடைய வல்லமையுள்ள படைப்பாற்றலை நம்முடைய நினைவில் கொண்டு வருகிறது. அவருடைய வல்லமையான படைப்பும், அவருடைய மென்மையும் நம்மைச் சூழ்ந்திருக்கின்றது. அவரே உயர்ந்த பர்வதங்களையும் பறவைகள் தங்கும் மரக்கிளைகளையும் படைத்தார். ‘அவைகளையெல்லாம் ஞானமாய் படைத்தீர்” (வச. 24).
நாம் தேவனுடைய படைக்கும் வல்லமையால் சூழப்பட்டுள்ளோம்.