நம்முடைய வாழ்வின் திசையை எது தீர்மானிக்கின்றது? இந்தக் கேள்விக்கான விடையை நான் ஒரு எதிர்பாராத இடத்தில் பெற்றேன். அது ஒரு மோட்டார் வாகன பயிற்சிமையத்தில். நானும் என்னுடைய சில நண்பர்களும் மோட்டார் வாகனத்தை ஓட்ட விரும்பினோம். எனவே நாங்கள் அதனைக் கற்றுக்கொள்ள ஒரு வகுப்பில் சேர்ந்தோம். எங்களுடைய பயிற்சியின் ஒருபகுதி, இலக்கினை நிர்ணயித்தலைப் பற்றியிருந்தது.

எங்களுடைய பயிற்சியாளர், “கடைசியாக, நீங்கள் எதிர்பாராத ஒரு தடையை சந்திக்கப் போகின்றீர்கள்.” நீங்கள் தடையையே நினைத்து கவனித்தால், உங்களுடைய இலக்கு அதுவாகிவிட்டால், நீங்கள் அதற்கு நேராக ஓட்டிச் செல்வீர்கள், ஆனால், நீங்கள் முன்னோக்கிப் பார்த்துக் கொண்டு, அதனை வேகமாகக் கடந்து நீங்கள் செல்ல வேண்டிய இடத்தை நோக்கிப்பார்த்தால் தடையில் மோதுவதை தவிர்த்து விடலாம். அத்தோடு, “நீங்கள் எங்கு பார்க்கின்றீர்களோ, அங்குதான் நீங்கள் போய் சேர்வீர்கள்” என்று கூறினார்.

இந்த எளிமையான, ஆனால், ஆழமான தத்துவம் நம்முடைய ஆவிக்குரிய வாழ்விற்கும் பொருத்தமானது. நாம் நம்முடைய கவனத்தை ஒரு காரியத்தில் நிலைப்படுத்தும்போது – நம்முடைய பிரச்சனைகளிலோ, போராட்டங்களிலோ முழு கவனத்தையும் செலுத்தும் போது நம்முடைய வாழ்வும் தானாகவே அதனைச் சுற்றியேயிருக்கும்.

ஆனால், நம்முடைய பிரச்சனைகளையும் தாண்டி, நம்முடைய பிரச்சனைகளில் உதவக் கூடிய ஒருவரையே நாம் நோக்கிப் பார்க்கும் படி வேதாகமம் நம்மை ஊக்கப்படுத்துகின்றது. சங்கீதம் 121ல், “எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்” எனக்குப் பதில் எங்கிருந்து வரும் என்பதையும் அதே சங்கீதத்தில் காண்கின்றோம். “வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்… கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இது முதற்கொண்டு என்றைக்குங் காப்பார்” (வச. 1-2,8).

சில வேளைகளில் நமக்கு ஏற்படுகின்ற தடைகள் மேற்கொள்ள முடியாதவைகளாகத் தோன்றலாம். அவை நம்முடைய பார்வை கோணத்தை முற்றிலும் மறைத்து விடாதபடி, நம்முடைய பிரச்சனைகளுக்கப்பால் தேவனை நோக்கிப் பார்க்கும்படி தேவன் நம்மையழைக்கின்றார்.