கடந்த ஆண்டில் என் நண்பர்களும் நானும் புற்றுநோயோடு போராடிக் கொண்டிருந்த மூன்று பெண்மணிகளின் சுகத்திற்காக ஜெபித்தோம். தேவன் இதைச் செய்ய வல்லமையுடையவர் என்பது எங்களுக்குத் தெரியும். எனவே தேவன் செயல்படுமாறு அனுதினமும் ஜெபித்துவந்தோம். கடந்த நாட்களில் தேவன் செயல்பட்டதைக் கண்டிருக்கின்றோம். எனவே அவ்வாறு மீண்டும் செய்வாரென விசுவாசிக்கிறோம். ஒவ்வொருவரும் அநேக நாட்கள் போராட்டத்திற்குப்பின், உண்மையிலேயே சுகம் பெற்றதாகத் தோன்றியது. நாங்கள் மகிழ்சியடைந்தோம். ஆனால், அவர்கள் மூவரும் சில நாட்களுக்குப் பின் மரித்துப் போயினர். எங்கள் மகிழ்ச்சியும் விழுந்துபோனது. சிலர் இதனை, “நித்திய சுகம்” எனக் கூறினர். ஒரு வகையில் அப்படித்தான். ஆனாலும் அந்த இழப்பு எங்களை வெகுவாகப் பாதித்தது. தேவன் அவர்களை குணப்படுத்த வேண்டுமென விரும்பினோம். ஆனால், எந்த அற்புதமும் நடைபெறாதது, ஏனென்று எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.
சில ஜனங்கள் இயேசுவை அவர் செய்த அற்புதங்களுக்காகப் பின்பற்றினர். தங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள பின்பற்றினர் (யோவா. 6:2,26). சிலர் அவரை ஒரு தச்சனின் மகனாகப் பார்த்தனர் (மத். 13:55-58) வேறு சிலர் அவரை தங்களின் அரசியல் தலைவராக எதிர்பார்த்தனர் (லூக். 19:37-38) சிலர் அவரை சிறந்த போதகராகப் பார்த்தனர் (மத். 7:28-29) அவருடைய உபதேசம் ஏற்றுக்கொள்ள கடினமாக இருந்தபடியால் மற்றவர்கள் அவரைவிட்டுப் பின் வாங்கினர் (யோவா. 6:66).
நாம் எதிர்பார்க்கின்றவற்றை இயேசு இன்னமும் நிறைவேற்றவில்லை. ஆனாலும் அவர் நாம் நினைப்பதையும் விட மேலாகச் செய்கின்றவர். அவரே நித்திய வாழ்வைத் தருபவர் (யோவா. 6:47-48). அவர் நல்லவரும் ஞானமுள்ளவருமாயிருக்கிறார். அவர் நம்மை நேசிக்கின்றார், மன்னிக்கின்றார், நம்மருகில் இருக்கின்றார், நமக்கு ஆறுதலைத் தருகின்றார். நாம் அவரின் மீது சாய்ந்து இளைப்பாறி, தொடர்ந்து அவரைப் பின்பற்றுவோம்.
நானோ, கர்த்தாவே உம்மை நம்பியிருக்கிறேன். “நீரே என் தேவன்" என்று சொன்னேன். சங்கீதம் 31:14