சட்ட திட்டங்களைக் கடைபிடித்து நேர்மையாக வாழ்ந்து கொண்டிருந்த ஒரு மனிதனுக்கு ஒரு நாள் அலைபேசி அழைப்பில் “நான் காவல்துறை அதிகாரி, காவல்துறை அலுவலகத்திலிருந்து பேசுகிறேன். தயவுகூர்ந்து என்னை இந்த எண்ணில் அழைக்கவும்” என்ற ஒரு செய்தி வந்தது. உடனடியாக அந்த மனிதனைக் கவலை தொற்றிக் கொண்டது. தான் ஏதோ தவறு செய்திருக்க வேண்டும் என பயந்தான். அவன் அந்த அழைப்பைக் கொடுக்க நடுங்கினான். அவன் சில இரவுகளைத் தூங்காமல் கழித்தான். இவ்வாறு என்ன நடக்குமோவென வெவ்வேறு காட்சிகளைத் தன் கண்முன்னே கொண்டு வந்து, கவலைப்பட்டு, தான் ஏதோவொரு பிரச்சனையில் மாட்டியிருப்பதாக எண்ணிக் கொண்டிருந்தான். அந்த அதிகாரியும் அவனை மீண்டும் அழைக்கவேயில்லை. ஆனால், அந்த கவலையிலிருந்து விடுபட பல வாரங்களாயின.
கவலையைக் குறித்து இயேசுவும் ஓர் ஆர்வமான கேள்வியைக் கேட்கின்றார். “கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?” (மத். 6:27). இது நாம் ஏன் கவலைப்படுகிறோமென மீண்டும் சிந்திக்கச் செய்கிறது. ஏனெனில், நாம் எந்தக் காரியத்தைக் குறித்து கரிசனை கொண்டுள்ளோமோ அதில் கவலை எந்த உதவியையும் செய்ய முடியாது.
பிரச்சனைகள் நம்மை நெருங்குகையில் நாம் இந்த இருபடி அணுகுமுறையை கடைபிடிக்கலாம். முயற்சி செய், தேவனை நம்பியிரு. நாம் அந்த பிரச்சனையைத் தவிர்க்க முடியுமாயின் அதன் வழியே முயற்சிப்போம். நாம் எடுக்க வேண்டிய செயலில் ஒரு வழியைக் காட்டும்படி தேவனிடம் ஜெபிக்கலாம். நம்மால் செய்யக் கூடியது எதுவுமில்லையாயின், தேவன் அப்படிப்பட்ட மீளமுடியாத இக்கட்டில் இல்லையென்பதை தெரிந்துகொள்ளலாம். தேவன் எப்பொழுதும் நமக்குச் சாதகமாகவே செயல்படுவார். நாம் நம் சூழ்நிலைகளை விசுவாசத்தோடும் நம்பிக்கையோடும் அவரிடம் திருப்பிவிடலாம்.
கவலைப்பட வேண்டிய நேரத்தைப் போல் உணருகையில், தாவீது ராஜாவின் ஊக்குவிக்கும் வார்த்தைகளுக்கு நாம் திரும்புவோமாக, கஷ்டங்களையும் கவலையும் அவர் சந்தித்தபோதும்கூட அவர் இவ்வாறு கூறுகிறார், “கர்த்தர் மேல் உன் பாரத்தை வைத்துவிடு. அவர் உன்னை ஆதரிப்பார்” (சங். 55:22). இது கவலைக்கு எத்தனை பெரிய மாற்று வழி!
எந்தக் கவலைகளையெல்லாம் நீ தேவனிடம் விட்டுவிடப் போகின்றாய்?