டானி, மொடூப்பே ஆகிய இருவரும் நைஜீரியாவில் வளர்ந்தனர். அவர்கள் 1970 ஆம் ஆண்டு இங்கிலாந்து தேசத்திற்கு உயர்கல்விக்காகச் சென்றனர். தேவனுடைய கிருபையால் வாழ்வு மாற்றம் பெற்றனர். இங்கிலாந்து தேசத்தில், விவர் பூல் மாகாணத்தில் அன்பீல்ட் என்ற இடத்தில் வாழ்ந்து வந்த மிகவும் பின் தங்கிய, பிரிக்கப்பட்ட சமுதாயத்தினரை மாற்றும்படி தாங்கள் பயன்படுத்தப்படுவர் என்று அவர்கள் நினைத்ததேயில்லை. மருத்துவர்களான டானியும், மொடூப்பே ஆமிடேயும் உண்மையாய் தேவனைத் தேடியதோடு, தங்கள் சமுதாயத்தினருக்கும் பணி புரிந்தனர். தேவன் அநேகருடைய வாழ்வில் நம்பிக்கையைக் கொடுத்தார். அவர்கள் வல்லமையான ஒரு சபையை நடத்தியதோடு, அநேக சமுதாயச் சேவைகளையும் தொடர்ந்தனர். அதன் மூலம் எண்ணடங்கா மக்களின் வாழ்வு மாற்றத்திற்கு வழிவகுத்தனர்.

மனாசே தன்னுடைய சொந்த சமுதாயத்தை மாற்றினான். முதலாவது தீய வழிக்கு தன் ஜனங்களை நடத்தினான். பின்னர் அவர்களை நல்வழிப்படுத்தினான். யூதாவின் அரசனாக தனது பன்னிரண்டாம் வயதில் முடிசூட்டப்பட்ட மனாசே தன் ஜனங்களை வழிதவறச் செய்தான். அவர்கள் பல ஆண்டுகளாக பொல்லாப்பைச் செய்து வந்தனர் (2 நாளா. 33:1-9). அவர்கள் தேவனுடைய எச்சரிப்புக்குச் செவிசாய்க்கவில்லை. எனவே தேவன் மனாசேயை பாபிலோனுக்கு சிறைபிடித்துச் செல்லும்படி ஒப்புக்கொடுத்தார் (வச. 10-11).

அவன் இப்படி நெருக்கப்படுகையில் தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கெஞ்சி, தன் பிதாக்களின் தேவனுக்கு முன்பாகத் தன்னை மிகவும் தாழ்த்தினான். தேவன் அவனுடைய விண்ணப்பத்தைக் கேட்டு அவனை மீண்டும் அவனுடைய இராஜ்ஜியத்திற்கு வரப்பண்ணினார் (வச. 12-13). அவன் தாவீதுடைய நகரத்தின் வெளி அலங்கத்தைக் கட்டி, அந்நிய தேவர்களை அகற்றினான் (வச. 14-15). அவன் கர்த்தருடைய பலிபீடத்தைச் செப்பனிட்டு… இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை சேவிக்க வெண்டுமென யூதாவுக்கு கட்டளையிட்டான் (வச. 16). மனாசேயிடமிருந்த பூரண மாற்றத்தைக் கண்ட ஜனங்கள், தாங்களும் மாற்றமடைந்தனர் (வச. 17).

நாம் தேவனைத் தேடும்போது, அவர் நம்மை மாற்றுவதோடல்லாமல் நம்மூலம் நம்முடைய சமுதாயத்தையும் மாற்றுவார்.