என்னுடைய மகன்கள் சிறியவர்களாக இருந்தபோது, எங்கள் குடும்ப நண்பர்களோடு நாங்கள் களித்த நாட்களைப் பற்றிய நினைவுகளை ஒரு பொக்கிஷமாக என் நினைவில் வைத்துள்ளேன். பெரியவர்கள் இரவு வெகுநேரம் வரை பேசிக் கொண்டிருப்போம். எங்களுடைய குழந்தைகள் விளையாடி சோர்ந்து ஒரு சோபாவில் அல்லது ஒரு நாற்காலியில் படுத்து உறங்கிவிடுவர்.
நாங்கள் திரும்ப வேண்டிய நேரம் வரும்போது, நான் என்னுடைய மகன்களை என் கரத்தில் அணைத்து சுமந்து காருக்குக் கொண்டு சென்று பின் இருக்கையில் படுக்கச் செய்து, எங்கள் வீட்டிற்குத் திரும்புவோம். வீடு வந்ததும் அவர்களை அப்படியேத் தூக்கி அவர்களுடைய படுக்கையில் கிடத்தி, வாழ்த்தி முத்தமிட்டு விளக்குகளை அணைத்துவிட்டு வருவேன். மறுநாள் காலையில் அவர்கள் தங்கள் வீட்டில் எழுந்திருப்பார்கள்.
இந்த நிகழ்வு, நாம் இயேசுவுக்குள் நித்திரையடையும் (1 தெச. 4:14) இரவினைக் குறித்து என்னைச் சிந்திக்க வைத்தது. நாம் நித்திரையடைந்து… நம்முடைய நித்திய வீட்டில் விழிப்போம். நம்முடைய வாழ்நாட்களில் நாம் அநுபவித்த அத்தனை சோர்வையும் நித்திய வீடு மாற்றிவிடும்.
பழைய ஏற்பாட்டில் உபாகமத்தில் வரும் ஒரு பகுதி என்னை வியப்படையச் செய்தது. “அப்படியே… மோசே மோவாப் தேசமான அவ்விடத்திலே கர்த்தருடைய வார்த்தையின் படியே மரித்தான்” (34:5). எபிரெய வழக்கப்படி “மோசே தேவனுடைய வாயைத் தொட்டபடியே மரித்தான்” என வரும் சொற்டொடரை பழங்கால போதகர்கள் “ தேவனுடைய முத்தத்தோடு” என மொழி பெயர்த்தனர்.
இப்புவியில் நம்முடைய கடைசி மூச்சின் போது தேவன் குனிந்து நம்மை முத்தமிட்டு வாழ்த்துவார் என்பதைக் கற்பனை செய்துபார்த்தால் அது சற்று மிகைப்பட்டதாகத் தோன்றுகின்றது. ஜான் டோன் இதனையே நமக்கு ஏற்றாற்போல் “ஒரு சிறிய தூக்கம் முடிந்து, நாம் நித்தியத்திற்குள் விழிப்போம்” எனக் கூறியுள்ளார்.
சாவு என்பது ஒரு முடிவல்ல, அது நம்மை இவ்வுலக வாழ்வு காலத்திலிருந்து நித்தியத்திற்கு ஒப்புவிக்கும் ஒரு நிகழ்வு.