தங்கள் உடல்மீது எழுதிக் கொள்ளல் அல்லது வரைந்து கொள்ளல் என்பது தற்காலத்தில் மிகவும் பிரபலமாகி வருகின்றது. இந்தப் பச்சைக் குத்திக் கொள்ளலில் சில சிறியதாகவும் யார் கவனத்தையும் ஈர்ப்பதாகவும் இருப்பதில்லை. ஆனால், தற்பொழுது விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் முதல் சாதாரண மக்கள் வரை தங்கள் உடலின் பெரும்பகுதியை வண்ணங்களாலான படங்கள், எழுத்துக்கள், கோலங்களால் மூடிவிடுகின்றனர். 2014 ஆம் ஆண்டு பச்சைக் குத்தல் மூலம் மூன்று பில்லியன் டாலர் வருவாய் கிடைத்ததெனவும், பச்சைக் குத்தியதை அழிப்பதன் மூலம் அறுபத்தாறு மில்லியன் டாலர் வருவாய் கிடைத்தாகவும் வலைதளங்கள் தெரிவிக்கின்றன.

நீங்கள் இவ்வாறு பச்சைக் குத்திக் கொள்வதைக் குறித்து என்ன எண்ணினாலும் சரி, ஏசாயா 44, ஜனங்கள் தங்கள் கரங்களில் எதையாகிலும் எழுதிக் கொள்வதைப் பற்றி குறிப்பிடுகின்றது. “நான் கர்த்தருடையவன்” (வச. 5) என்று தனக்கு ஒரு நாமத்தைத் தரித்துக்கொள்வது, தேவன் தாம் தெரிந்துகொண்ட ஜனத்தின் மீது கொண்டுள்ள கரிசனையை விளக்கும் அந்தப் பகுதியின் உச்சக்கட்டத்தைக் காட்டுகின்றது (வச. 1). கர்த்தர் அவர்களுக்குத் துணை செய்கிறவர் (வச. 2) அவர்களுடைய நிலமும் அவர்களுடைய சந்ததியும் தேவனுடைய ஆசீர்வாதத்தைப் பெறும்படி முன் குறிக்கப்பட்டது (வச. 3). இரண்டு வல்லமையான வார்த்தைகள் “நான் கர்த்தருடையவன்” என்பன அவர்கள் தேவனுக்குச் சொந்தமானவர்கள் என்பதையும், தேவன் அவர்களைப் பாதுகாக்கின்றார் என்பதையும் உறுதியாக வெளிப்படுத்துகின்றன.

இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையினால் தேவனிடத்தில் வருகின்றவர்கள் தங்களைக் குறித்து உறுதியான நம்பிக்கையோடு தங்களைக் குறித்து, “நான் கர்த்தருடையவர்” என்று சொல்லலாம். நாம் அவருடைய ஜனங்கள், அவருடைய ஆடுகள், அவருடைய பிள்ளைகள், அவருடைய பின் சந்ததியினர் அவரோடு குடியிருப்பவர்கள். இவை நம் வாழ்வின் எல்லாக் காலங்களிலும் நாம் பற்றிக்கொள்ள வேண்டியவை. நமக்கு வெளிப்பிரகாரமான எந்த அடையாளமோ, பச்சைக் குத்தலோ தேவையில்லை. நம் இருதயங்களில் இருக்கிறார் என்பதை நம் சிந்தனையில் பதித்துக் கொள்வோம். நாம் கர்த்தருடையவர்கள் (ரோம. 8:16-17).