ஓட்டுவது யார்?
மோரிஸ் சென்டாக் எழுதிய காட்டுத்தனமான பொருட்கள் இருக்கும் இடத்தில் என்று பொருள்படக்கூடிய (Where the Wild Things are) குழந்தைகள் கதை புத்தகத்தில் வருவதைப்போல் “காட்டுத்தனமான பொருள்” ஒன்றை என் பக்கத்து வீட்டுக்காரர் டிம் தன் காரில் வைத்திருக்கிறார்.
ஒரு நாள் சாலையில் என் பின்னால் தன் காரில் வந்துகொண்டிருந்த டிம் திடீரென்று காரை வளைத்து ஓட்டினார். காரை விட்டு இறங்கியபோது “’காட்டுத்தனமான பொருள்’தான் வண்டி ஓட்டியதோ?” என்று கேட்டேன்.
அதற்கு அடுத்த ஞாயிற்றுக்கிழமை, என் பிரசங்கக் குறிப்புகளை வீட்டில் மறந்து வைத்துவிட்டேன். எனவே அதை எடுப்பதற்காக வீட்டிற்கு காரில் ‘பறந்து’ சென்றேன். வழியில் டிம்மின் கார் எதிர்திசையில் என்னைக் கடந்து சென்றது. பின்னர் நாங்கள் சந்தித்தபோது, என் வேகத்தைப் பற்றி குறிப்பிடும் விதமாக “’காட்டுத்தனமான பொருள்’தான் வண்டி ஓட்டியதோ?” என்று கிண்டல் செய்தார். நாங்கள் சிரித்தாலும், நான் வேக வரம்பை கவனிக்கவில்லை என்பதை அவர் சொன்னது எனக்கு என் தவறை உணர்த்தியது.
தேவனுடனான உறவில் நாம் வாழ்வதைப்பற்றி விவரிக்கும் வேதாகமம், “உங்கள் அவயவங்களை தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்” என்று நம் ஒவ்வொரு அம்சத்தையும் ஒப்புக்கொடுக்க ஊக்குவிக்கிறது (ரோம. 6:13). அன்போடு என்னை முழுமையாக ஒப்புக்கொடுக்கவேண்டும் என்பதால், டிம் என்னிடம் கூறியதை, வேகமாக கார் ஓட்டும் பழக்கத்தை ஒப்புக்கொடுக்க தேவன் எனக்கு நினைவுபடுத்தியதாக எடுத்துக்கொண்டேன்.
“ஓட்டுவது யார்?” என்ற கேள்வி வாழ்வின் அனைத்து அம்சங்களுக்கும் பொருந்தும். கவலை, பயம், சுய சித்தம் போன்ற பழைய “காட்டுத்தனமான பண்புகள்” நம்மை இயக்குகின்றனவா? அல்லது நாம் வளர உதவும் பரிசுத்த ஆவியின் அன்புக்கும், கிருபைக்கும் நம்மை ஒப்புக்கொடுக்கிறோமா?
தேவனிடம் ஒப்புக்கொடுப்பது நமக்கு நல்லது. தேவனின் ஞானம் நம்மை “இனிதான வழிகளிலும், சமாதானமான பாதைகளிலும்” அழைத்துச் செல்வதாக வேதாகமம் கூறுகிறது (நீதி. 3:17). அவர் வழிநடத்தும் பாதையில் செல்வதே நல்லது.
நிச்சய நம்பிக்கை
ஜப்பான் சீனாவை 1940ஐ ஒட்டிய காலக்கட்டத்தில் தாக்கியபோது, டாக்டர். வில்லியம் வாலஸ் மிஷனரி மருத்துவராக சீனாவின் வசூ பகுதியில் பணியாற்றிக்கொண்டிருந்தார். அப்போது ஸ்டௌட் நினைவு மருத்துவமனையின் பொறுப்பாளராகப் பணி செய்த அவர், தனக்குத் தேவையான உபகரணங்கள் அனைத்தையும் படகுகளில் ஏற்றச்சொன்னார். காலாட்படையினரின் தாக்குதல்களைத் தவிர்க்க, அவர் ஆறுகளில் பயணம் செய்து மருத்துவப்பணிகளைத் தொடர்ந்தார்.
ஆபத்தான நேரங்களில், அவர் உயிரோடு இருந்தால், அவர் இரட்சகருக்காக செய்ய வேண்டிய வேலைகள் உண்டு என்பதை வாலஸுக்குப் பிடித்த வசனங்களில் ஒன்றான பிலிப்பியர் 1:21 அவருக்கு நினைவுபடுத்தியது. அவர் இறக்க நேர்ந்தால், கிறிஸ்துவுடனான நித்திய வாழ்வின் வாக்குத்தத்தம் அவருக்கு இருந்தது. 1951ஆம் ஆண்டு, பொய்யான குற்றச்சாட்டுகளுடன் சிறைபிடிக்கப்பட்டு, அவர் இறந்தபோது, இந்த வசனம் ஒரு விசேஷ அர்த்தத்தை வெளிப்படுத்தியது.
இயேசுவைப் பின்பற்றுபவர்களாக, நாமும் விரும்பக்கூடிய ஆழ்ந்த பக்தியை பவுலின் எழுத்துக்கள் வெளிப்படுத்துகின்றன. சோதனைகளையும், தேவனுக்காக ஆபத்துக்களையும்கூட எதிர்கொள்ள அவை நமக்கு உதவுகின்றன. பரிசுத்த ஆவியாலும், நமக்கு அருமையானவர்களின் ஜெபங்களாலும் நாம் பெற்றுக்கொண்ட பக்தி அது (வச. 19). அது ஒரு வாக்குறுதியும்கூட. மிகவும் கடினமான சூழ்நிலைகளிலும், அவருடைய சேவைக்காக நம்மை முற்றிலுமாக ஒப்புக்கொடுக்கும்போது, நமக்கு நினைவுறுத்தப்படும் விஷயம் என்னவென்றால் - இங்கு நம்முடைய வேலையும், வாழ்க்கையும் முற்றுப்பெறும்போது, இயேசுவுடனான நித்திய வாழ்க்கை நமக்குக் காத்திருக்கிறது என்ற சந்தோஷம் நமக்கு உண்டு.
கிறிஸ்துவுடன் நடப்பதற்கு ஒப்புக்கொடுத்த இருதயங்களோடும், அவருடனான நித்திய வாழ்விற்கான உறுதிமொழியின் மீதுள்ள கண்களோடும், நமது கடினமான தருணங்களிலும், நமது நாட்களும், நமது செயல்களும் ஆண்டவரின் அன்பால் மற்றவர்களை ஆசீர்வதிப்பதாக.
அவர் பிரசன்னம்
பதற்றம் தோய்ந்த முகத்துடன் ஒரு மனிதன் தன் பதின்பருவ மகனுடன், ஆவி உலகைத் தொடர்புகொள்ளும் ஒரு மாந்திரீகன் முன்பாக அமர்ந்திருந்தார். “உங்கள் மகன் எவ்வளவு தூரம் பயணம் செய்யப்போகிறான்?” என்று கேட்டார். “பெரிய நகரத்துக்கு. அவன் திரும்பி வர ரொம்ப நாட்கள் ஆகும்” என்று அந்தத் தந்தை பதில் அளித்தார். தந்தையிடம் ஒரு தாயத்தைக் கொடுத்த அந்த மனிதன், “அவன் போகும் இடமெல்லாம் இது அவனைப் பாதுகாக்கும்” என்று கூறினார்.
நான்தான் அந்த பதின்பருவப் பையன். ஆனால் அந்த மந்திரிக்கும் மனிதரோ, அந்த தாயத்தோ எனக்கு எதுவும் செய்ய முடியவில்லை. நகரத்தில் இருக்கும்போது, நான் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கை கொண்டேன். அந்த தாயத்தைத் தூர எறிந்துவிட்டு, கிறிஸ்துவைப் பற்றிக்கொண்டேன். என் வாழ்க்கையில் கிறிஸ்து இருப்பது, எனக்கு தேவனின் பிரசன்னத்தை உறுதிசெய்தது.
முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, என் சகோதரனை அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றபோது, இப்போது கிறிஸ்தவ விசுவாசியாகிவிட்ட என் தந்தை, “முதலில் நாம் ஜெபம் செய்வோம். தேவப் பிரசன்னம், நீ போகும் வழி நெடுகிலும் உன்னோடு செல்லும்” என்றார். தேவனின் பிரசன்னமும், அவரது வல்லமையும் மட்டுமே எங்களுக்குப் பாதுகாப்பு என்பதை நாங்கள் கற்றுக்கொண்டிருந்தோம்.
மோசேயும் இதே போன்ற ஒரு போதனையைப் பெற்றார். ஆண்டவர் அவருக்கு ஒரு சவாலான வேலையைக் கொடுத்தார். எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்து, தம் ஜனங்களை வெளிவரச் செய்து, தாம் வாக்குக்கொடுத்த கானான் தேசத்துக்கு அவர்களை அழைத்துச் செல்வதே அந்த வேலை (யாத்திராகமம் 3:10). ஆனால் தேவன் “நான் உன்னோடே இருப்பேன்” என்று உறுதி அளித்தார் (வச. 12).
நமது பயணமும் சவால்கள் நிறைந்தது. ஆனால் தேவப் பிரசன்னம் நம்மோடு இருக்கும் என்று நமக்கு உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. இயேசு தமது சீஷர்களுக்குச் சொன்னதுபோல, “இதோ உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” (மத். 28:20).
நம்மால் செய்ய முடிந்தது
படுக்கையிலேயே தன் நாட்களைக் கழிக்க நேர்ந்தபோதும், 92 வயதான மோரீ பூகார்ட், மிஷிகனில் உள்ள ஆதரவற்ற, வீடில்லாத மக்களுக்காக தொப்பிகள் பின்னினார். அவர் 15 ஆண்டுகளில் 8000த்துக்கும் அதிகமான தொப்பிகளைப் பின்னியதாகக் கூறப்பட்டது. தன்னுடைய சுகவீனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், மற்றவர்களுடைய தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தன்னால் முடிந்த உதவியைச் செய்தார். அவ்வாறு உதவி செய்வது தனக்கு மகிழ்ச்சியைத் தந்ததாகவும், வாழ்க்கையில் தனக்கு ஒரு பிடிப்பைக் கொடுத்ததாகவும் கூறினார். “நான் என் ஆண்டவரிடம் போகும்வரை இதைச் செய்வேன்” என்று கூறிய அவர் பிப்ரவரி 2018ல் ஆண்டவரிடம் சென்றார். அவர் பின்னிய தொப்பிகளைப் பெற்ற மனிதர்களுக்கு அவரைப் பற்றியோ, ஒவ்வொரு தொப்பியையும் பின்ன அவர் எவ்வளவு சிரமப்பட்டார் என்பதோ தெரியப்போவதில்லை. ஆனால் அன்பினால் அவர் செய்த அந்த சிறிய உதவி இன்று உலகமெங்கும் பல பேரை ஊக்குவிக்கிறது.
நம்முடைய கஷ்டங்களைக் கருத்தில் கொள்ளாமல், நமக்கு மேலாக மற்றவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, நம்முடைய அன்பான, கிருபை நிறைந்த இரட்சகர் இயேசு கிறிஸ்துவை முன்மாதிரியாகக் கொண்டு நாமும் செயல்படலாம் (பிலிப். 2:1-5). ராஜாதி ராஜா, மனுஷ சாயலான தேவன், உண்மையான தாழ்மையுடன் ஒரு அடிமையின் தன்மையைத் தரித்துக்கொண்டார் (வச. 6-7). அதிகபட்ச தியாகமாக, தன்னுடைய உயிரைக் கொடுத்து, நமக்குப் பதிலாக சிலுவையில் அறையுண்டார் (வச. 8). இயேசு நமக்காக - பிதாவாகிய தேவனின் மகிமைக்காக - எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்தார் (வச. 9-11).
இயேசுவை விசுவாசிப்பவர்களாக, மற்றவர்களிடம் அன்பு செலுத்துவதும், மற்றவர்களுக்கு உதவுவதால் அவர்கள்மீதான கரிசனையை வெளிப்படுத்துவதும், நமக்குக் கொடுக்கப்பட்ட சிறப்பு உரிமை. கொடுப்பதற்கு நம்மிடம் எதுவும் இல்லை என்று நினைத்தாலும், ஒரு பணியாளின் தாழ்மையைத் தரித்துக்கொள்ளலாம். மற்றவர்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த நம்மால் முடிந்ததைச் செய்வதற்கு தருணங்களை ஏற்படுத்திக்கொள்ளலாம்.