ஜப்பான் சீனாவை 1940ஐ ஒட்டிய காலக்கட்டத்தில் தாக்கியபோது, டாக்டர். வில்லியம் வாலஸ் மிஷனரி மருத்துவராக சீனாவின் வசூ பகுதியில் பணியாற்றிக்கொண்டிருந்தார். அப்போது ஸ்டௌட் நினைவு மருத்துவமனையின் பொறுப்பாளராகப்  பணி செய்த அவர், தனக்குத் தேவையான உபகரணங்கள் அனைத்தையும் படகுகளில் ஏற்றச்சொன்னார். காலாட்படையினரின் தாக்குதல்களைத் தவிர்க்க, அவர் ஆறுகளில் பயணம் செய்து மருத்துவப்பணிகளைத் தொடர்ந்தார்.

ஆபத்தான நேரங்களில், அவர் உயிரோடு இருந்தால், அவர் இரட்சகருக்காக செய்ய வேண்டிய வேலைகள் உண்டு என்பதை வாலஸுக்குப் பிடித்த வசனங்களில் ஒன்றான பிலிப்பியர் 1:21 அவருக்கு நினைவுபடுத்தியது.  அவர் இறக்க நேர்ந்தால், கிறிஸ்துவுடனான நித்திய வாழ்வின் வாக்குத்தத்தம் அவருக்கு இருந்தது. 1951ஆம் ஆண்டு, பொய்யான குற்றச்சாட்டுகளுடன் சிறைபிடிக்கப்பட்டு, அவர் இறந்தபோது, இந்த வசனம் ஒரு விசேஷ அர்த்தத்தை வெளிப்படுத்தியது.

இயேசுவைப் பின்பற்றுபவர்களாக, நாமும் விரும்பக்கூடிய ஆழ்ந்த பக்தியை பவுலின் எழுத்துக்கள் வெளிப்படுத்துகின்றன. சோதனைகளையும், தேவனுக்காக ஆபத்துக்களையும்கூட எதிர்கொள்ள அவை நமக்கு உதவுகின்றன. பரிசுத்த ஆவியாலும், நமக்கு அருமையானவர்களின் ஜெபங்களாலும் நாம் பெற்றுக்கொண்ட பக்தி அது (வச. 19). அது ஒரு வாக்குறுதியும்கூட. மிகவும் கடினமான சூழ்நிலைகளிலும், அவருடைய சேவைக்காக நம்மை முற்றிலுமாக ஒப்புக்கொடுக்கும்போது, நமக்கு நினைவுறுத்தப்படும் விஷயம் என்னவென்றால் – இங்கு நம்முடைய வேலையும், வாழ்க்கையும் முற்றுப்பெறும்போது, இயேசுவுடனான நித்திய வாழ்க்கை நமக்குக் காத்திருக்கிறது என்ற சந்தோஷம் நமக்கு உண்டு.

கிறிஸ்துவுடன் நடப்பதற்கு ஒப்புக்கொடுத்த இருதயங்களோடும், அவருடனான நித்திய வாழ்விற்கான உறுதிமொழியின் மீதுள்ள கண்களோடும், நமது கடினமான தருணங்களிலும், நமது நாட்களும், நமது செயல்களும் ஆண்டவரின் அன்பால் மற்றவர்களை ஆசீர்வதிப்பதாக.