பதற்றம் தோய்ந்த முகத்துடன் ஒரு மனிதன் தன் பதின்பருவ மகனுடன், ஆவி உலகைத் தொடர்புகொள்ளும் ஒரு மாந்திரீகன் முன்பாக அமர்ந்திருந்தார். “உங்கள் மகன் எவ்வளவு தூரம் பயணம் செய்யப்போகிறான்?” என்று கேட்டார். “பெரிய நகரத்துக்கு. அவன் திரும்பி வர ரொம்ப நாட்கள் ஆகும்” என்று அந்தத் தந்தை பதில் அளித்தார். தந்தையிடம் ஒரு தாயத்தைக் கொடுத்த அந்த மனிதன், “அவன் போகும் இடமெல்லாம் இது அவனைப் பாதுகாக்கும்” என்று கூறினார்.

நான்தான் அந்த பதின்பருவப் பையன். ஆனால் அந்த மந்திரிக்கும் மனிதரோ, அந்த தாயத்தோ எனக்கு எதுவும் செய்ய முடியவில்லை. நகரத்தில் இருக்கும்போது, நான் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கை கொண்டேன். அந்த தாயத்தைத் தூர எறிந்துவிட்டு, கிறிஸ்துவைப் பற்றிக்கொண்டேன். என் வாழ்க்கையில் கிறிஸ்து இருப்பது, எனக்கு தேவனின் பிரசன்னத்தை உறுதிசெய்தது.

முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, என் சகோதரனை அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றபோது, இப்போது கிறிஸ்தவ விசுவாசியாகிவிட்ட என் தந்தை, “முதலில் நாம் ஜெபம் செய்வோம். தேவப் பிரசன்னம், நீ போகும் வழி நெடுகிலும் உன்னோடு செல்லும்” என்றார். தேவனின் பிரசன்னமும், அவரது வல்லமையும் மட்டுமே எங்களுக்குப் பாதுகாப்பு என்பதை நாங்கள் கற்றுக்கொண்டிருந்தோம்.

மோசேயும் இதே போன்ற ஒரு போதனையைப் பெற்றார். ஆண்டவர் அவருக்கு ஒரு சவாலான வேலையைக் கொடுத்தார். எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்து, தம் ஜனங்களை வெளிவரச் செய்து, தாம் வாக்குக்கொடுத்த கானான் தேசத்துக்கு அவர்களை அழைத்துச் செல்வதே அந்த வேலை (யாத்திராகமம் 3:10). ஆனால் தேவன் “நான் உன்னோடே இருப்பேன்” என்று உறுதி அளித்தார் (வச. 12).

நமது பயணமும் சவால்கள் நிறைந்தது. ஆனால் தேவப் பிரசன்னம் நம்மோடு இருக்கும் என்று நமக்கு உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. இயேசு தமது சீஷர்களுக்குச் சொன்னதுபோல, “இதோ உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” (மத். 28:20).