பாடுவது எவ்வளவு முக்கியமானது என்று எங்கள் குழந்தைகள் பிறக்கும் முன் எனக்கோ, என் மனைவிக்கோ யாரும் சொல்லவில்லை. என் பிள்ளைகளுக்கு இப்போது முறையே ஆறு, எட்டு, பத்து வயதாகிறது. ஆனால் அவர்கள் குழந்தைகளாக இருந்தபோது தூங்குவதற்கு மிகவும் சிரமப்பட்டார்கள். ஒவ்வொரு இரவும் நானும், என் மனைவியும் மாறி மாறி அவர்களைத் தொட்டிலில் போட்டு ஆட்டி, தூங்க மாட்டார்களா என்று ஏங்குவோம். அவர்களை சீக்கிரம் தூங்க வைக்கும் எண்ணத்தில், தொட்டிலை ஆட்டுவதிலும், தாலாட்டுப் பாடுவதிலும் பல மணி நேரம் செலவழித்திருக்கிறேன். ஆனால் ஒவ்வொரு இரவும் என் குழந்தைகளுக்காக நான் பாடும்போது, ஏற்பட்ட ஒரு மாறுதல் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தைத் தந்தது: அவர்கள்மீது நான் வைத்திருந்த அன்பும், சந்தோஷமும் நான் கனவிலும் நினைக்காத அளவிற்கு பல மடங்கு அதிகரித்தது. 

நம் பரம பிதா தன் பிள்ளைகளுக்காக மகிழ்ந்து பாடுவார் என்று வேதாகமம் சொல்வது உங்களுக்குத் தெரியுமா? பாட்டின்மூலம் நான் என் குழந்தைகளை அமர்த்த முயன்றதுபோல, நமது பரம தந்தை தன் மக்களுக்காகப் பாடுகிறார் என்ற வர்ணனையுடன் செப்பனியா தன் புத்தகத்தை முடிக்கிறார்: “அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்” (3:17). 

செப்பனியா தீர்க்கதரிசியின் புத்தகத்தின் பெரும்பகுதி தேவனை நிராகரித்தவர்களுக்கு வரவிருக்கும் நியாயத்தீர்ப்பைக் குறித்த எச்சரிக்கையாகும். ஆனால் செப்பனியா தன் புத்தகத்தை நியாயத்தீர்ப்புடன் முடிக்கவில்லை. ஆண்டவர் தன் மக்களை அவர்கள் துன்பங்களில் இருந்து மீட்பது மட்டுமல்லாமல் (வச.19-20), அவர்களை நேசிப்பதாகவும், அவர்கள்பேரில் மகிழ்ந்து பாடுவதாகவும் முடிக்கிறார் (வச. 17).

நம் ஆண்டவர் வல்லமையான இரட்சகர் மட்டுமல்லாமல் (வச.17), நமக்காக அன்பின் பாடல்களைப் பாடும் நம் நேச தகப்பனாகவும் இருக்கிறார்.