என் முதல் பிள்ளையை கல்லூரிக்கு அனுப்புவதற்காக நேற்று நான் விமான டிக்கெட் வாங்கினேன். விமானத்தைத் தேர்வு செய்வதற்குள் நான் சிந்திய கண்ணீரால் அதிகம் நனைந்தாலும், என் கணினியின் விசைப்பலகை (keyboard) வேலை செய்வது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. பதினெட்டு ஆண்டுகளாக அனுதின வாழ்க்கையை அவளோடு அனுபவித்ததை நினைக்கும்போது, அவள் என்னை விட்டு கல்லூரிக்குச் செல்வது அதிகக் கவலையைத் தருகிறது. ஆனாலும், அவள் பிரிவு கஷ்டமாக இருக்கும் என்கிற காரணத்துக்காக அவளுக்குக் கிடைக்கவிருக்கும் வாய்ப்புகளை இழக்கச் செய்யமாட்டேன். அவளது வாழ்வின் இந்தத் தருணத்தில், அவள் தன் பயணத்தைத் தொடங்கி, புதிய அனுபவங்களைப் பெற்றுக்கொள்வதும், இந்த தேசத்தின் மற்றொரு பகுதியை அறிந்துகொள்வதும் மிகச் சரியான விஷயமாகும்.
குழந்தை வளர்ப்பின் ஒரு பகுதி முடியும் இந்த சமயத்தில், இன்னொரு பகுதி தொடங்குகிறது. அதுவும் புதிய சவால்களும், புதிய சந்தோஷங்களும் நிறைந்ததாக இருக்கும். இஸ்ரவேலின் மூன்றாவது இராஜாவான சாலொமோன் “ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு” (பிரசங்கி 3:1) என்று கர்த்தர் ஒவ்வொன்றிற்கும் ஒரு காலத்தைக் குறித்திருப்பதைச் சொல்கிறார். நம் வாழ்வில் நேரிடும் சம்பவங்கள் – அவை நமக்கு சாதகமாக இருந்தாலும், இல்லாவிட்டாலும், மனிதராகிய நமக்கு அவற்றின் மேல் எந்த கட்டுப்பாடும் கிடையாது. ஆனால் தன் மிகுந்த வல்லமையால், கர்த்தர் “சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாய்ச் செய்கிறார்” (வச. 11).
மனதுக்கு சஞ்சலமான சமயங்களில், அதிலிருந்து நன்மையைத் தருவார் என்று நாம் கர்த்தரை நம்பலாம். நமது வசதிகளும், நமது சந்தோஷங்களும் மாறி மாறி வரலாம். ஆனால் தேவன் செய்வது “என்றைக்கும் நிலைக்கும்” (வச. 14). சில பருவங்களை நாம் ரசிக்க முடியாமல் இருக்கலாம். சில, மிகுந்த வேதனை அளிப்பவையாக இருக்கலாம். ஆனாலும் அவற்றையும் தேவன் அழகுபெறச் செய்ய முடியும்.
எல்லாப் பருவங்களிலும் கர்த்தர் நேர்த்தியையே தருகிறார்.