நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்.
மத்தேயு 6:6
ஜெப விண்ணப்பங்களை சிலர் குறிப்பேட்டில் எழுதிவைப்பார்கள். தினமும் உபயோகிப்பதால் அவை கிழிந்த நிலையில் இருக்கும். சிலர் ஒவ்வொரு ஜெபத்தையும், ஒவ்வொரு துதியையும் எழுதி, அந்தப் பட்டியலைப் புதுப்பித்துக்கொண்டே இருப்பார்கள். இவர்கள் அனைவரையும் பார்க்க எனக்கு ஆச்சரியமாக இருக்கும். மற்றவர்களோடு சேர்ந்து ஜெபிப்பவர்கள், மற்றும் தங்கள் கட்டில் அருகே தரைவிரிப்பு தேய்ந்துபோகும் அளவுக்கு முழங்கால்படியிட்டு ஜெபிப்பவர்களால் நான் அதிக ஊக்கம் பெறுகிறேன். நானும் அவர்களைப்போல ஜெபம் செய்ய பல ஆண்டுகள் முயன்றேன். ஒரு நிறைவான ஜெப வாழ்க்கையை விரும்பினேன். என்னைவிட நன்றாகப் பேசக்கூடியவர்களைப் போல நானும் பேச முயற்சி செய்தேன். ஜெபிப்பதற்கு சரியான முறையைத் தெரிந்துகொள்ள அதிக வாஞ்சையாக இருந்தேன். அதை ஒரு புதிராக நினைத்து, அதற்கு விடை காண முயற்சி செய்தேன்.
இறுதியில் நம் ஆண்டவர் நம்மைத் தாழ்த்தும் ஒரு ஜெபத்தையே விரும்புகிறார் என்று தெரிந்துகொண்டேன் (மத்தேயு 6:5). ஒரு நெருங்கிய உரையாடலுக்கு அவர் நம்மை அழைக்கிறார், அதைக் கேட்பதாக வாக்குக்கொடுக்கிறார். (வச. 6). மனனம் செய்த வார்த்தைகளோ, வாக்கியங்களோ, கற்பனை வளமுள்ள வார்த்தைகளோ அவருக்குத் தேவை இல்லை (வச. 7). ஜெபம் என்பது ஒரு வெகுமதி, அவரது மாட்சிமையை கனப்படுத்த ஒரு வாய்ப்பு (வச. 9-10), அவர் நமக்கு முன்குறித்திருப்பதில் நாம் காட்டும் நம்பிக்கை (வச. 11), அவர் அளிக்கும் மன்னிப்பு மற்றும் வழிகாட்டுதலில் நமக்கு இருக்கும் உறுதி (வச. 12-13)என்று கூறுகிறார்.
நம் வார்த்தைகளிலும், நம் எண்ணங்களிலும் இருக்கும் ஜெபங்களையும், நம் கன்னங்களில் கண்ணீராக வழியும் அமைதியான ஜெபங்களையும் கேட்பதாகவும், கரிசனை கொள்வதாகவும் கர்த்தர் நமக்கு உறுதி அளிக்கிறார். கர்த்தர் மீதும், அவர் அன்பின்மீதும் நாம் நம்பிக்கை வைக்கும்போது, அவரை மட்டுமே சார்ந்து இருக்கும் தாழ்மையான இருதயத்தை ஒப்புவித்து ஜெபிப்பதே சரியான ஜெபம் என்பதை புரிந்துகொள்வோம்.
இயேசுவை இரட்சகரும், ஆண்டவருமாக ஏற்றுத் தேடுவதே ஜெபிப்பதற்கு சரியான முறை.