வேதாகமப் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் நாங்கள் சிற்றுண்டி வினியோகித்தபோது, ஒரு சிறுவன் தனது சிற்றுண்டியை அவசரமாக விழுங்கினான். பின், தன் மேஜையில் அமர்ந்து சாப்பிட்ட சிறுவர்கள் மீதம் வைத்திருந்ததையும் சாப்பிட்டான். ஒரு கவரில் நான் பாப்கார்ன் கொடுத்த பிறகும் அவன் திருப்தி அடையவில்லை. அந்த நிகழ்ச்சியின் தலைவர்களாக, அந்தச் சிறுவன் ஏன் அவ்வளவு பசியாக இருக்கிறான் என்று சிறிது கவலைப்பட்டோம்.
நமது உணர்ச்சிகளைப் பொறுத்தவரை, நாமும் அந்தச் சிறுவனைப் போலவே இருக்கிறோம் என்று தோன்றியது. நமது ஏக்கங்களை திருப்திப்படுத்த என்ன வழி என்று யோசிக்கிறோம். ஆனால் எது நம்மை முழுவதுமாக திருப்திப்படுத்துகிறது என்பதை நாம் கண்டு பிடிப்பதேயில்லை.
“நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்” (ஏசாயா 55:1) என்று ஏசாயா தீர்க்கதரிசி நம்மை அழைக்கிறார். ஆனால் “நீங்கள் அப்பமல்லாததற்காகப் பணத்தையும், திருப்தி செய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் செலவழிப்பானேன்?” (வச. 2) என்றும் கேட்கிறார். சரீரப் பிரகாரமான பசியைப் பற்றி மட்டும் அவர் இங்கே குறிப்பிடவில்லை. தம் பிரசன்னம் கூட இருக்கும் என்று தேவன் கொடுத்த வாக்குறுதி மூலமாக, அவர் நம் ஆத்தும, உணர்வுப் பசிகளை தீர்க்கமுடியும். மூன்றாம் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள “நித்திய உடன்படிக்கை” கர்த்தர் தாவீதுக்கு 2 சாமுவேல் 7:8-16ல் கொடுத்த வாக்குறுதியை நினைவுபடுத்துகிறது. தாவீதின் பரம்பரையிலே, மக்களை கர்த்தரோடு இணைப்பதற்காக ஒரு இரட்சகர் தோன்றுவார். பின்னர் யோவான் 6:35, 7:37 ஆகிய வசனங்களில் ஏசாயா கொடுத்த அதே அழைப்பை இயேசுவும் கொடுக்கிறார். இதன்மூலம் ஏசாயாவும், மற்ற தீர்க்கதரிசிகளும் முன்னறிவித்த இரட்சகர் தானே என்று வெளிப்படுத்துகிறார்.
பசியாய் இருக்கிறீர்களா? அவரது சமூகத்தில் வந்து நிறைவாய்ப் பெற்றுக்கொள்ளும்படி தேவன் உங்களை அழைக்கிறார்.
நமது ஆத்துமப் பசியை தேவன் மட்டுமே திருப்தியாக்குவார்.