“கிப்” ஹார்டின் என்ற மெதடிஸ்ட் சபைப் போதகர், பிரபல பிரசங்கியார் ஜான் வெஸ்லியைப் போல் தன் மகன் வரவேண்டும் என்ற ஆசையில், அவரது ஆண் குழந்தைக்கு ஜான் வெஸ்லி என்று பெயர் வைத்தார். ஆனால், அதே பெயர் கொண்ட பிரசங்கியார் போல் அல்லாமல், ஜான் வெஸ்லி ஹார்டின் ஒரு மாறுபட்ட பாதையைத் தேர்ந்தெடுத்தார். நாற்பத்தி இரண்டு மனிதர்களைக் கொன்றதாகக் கூறிய அவன் 1800 ஆண்டு காலக் கட்டத்தில், அமெரிக்காவின் மேற்குப் பகுதியின் துப்பாக்கிச் சண்டைக்காரனாக, பொல்லாத துஷ்டனாக இருந்தான்.

தற்போது உள்ள கலாசாரத்தைப்போல வேதாகமத்திலும் பெயர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆண்டவருடைய குமாரனின் பிறப்பை முன்னறிவித்த தேவதூதன், மரியாளின் குழந்தைக்கு “அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” (மத்தேயு 1:21) என்று யோசேப்பிடம் கூறுகிறார். இயேசுவின் பெயருக்கு அர்த்தமான “யெகோவா இரட்சிப்பார்”, பாவத்திலிருந்து இரட்சிப்பதற்கான அவரது குறிக்கோளை உறுதிப்படுத்தியது.

ஹார்டினைப் போல் இல்லாமல், இயேசு, முழுவதுமாக தன் பெயருக்கேற்ப வாழ்ந்தார். அவரது மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலமாக, மீட்பு என்ற அவரது குறிக்கோளை நிறைவேற்றினார். “இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்திய ஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது” (யோவா. 20:31) என்று கூறியதன்மூலம், வாழ்வளிக்கும் கிறிஸ்துவின் பெயரை யோவான் உறுதிப்படுத்துகிறார். அப்போஸ்தலர் நடபடிகள் “அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும் மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை” (அப்போஸ்தலர் 4:12) என்று கூறி நம் அனைவரையும் அவரை விசுவாசிக்கும்படி அழைக்கிறது.

இணையில்லாத இயேசுவின் நாமத்தை விசுவாசத்தோடே தேடும் அனைவரும், அவர் தரும் மன்னிப்பையும், நம்பிக்கையையும் அனுபவிக்க முடியும். நீங்கள் அவர் நாமத்தைத் தேடினீர்களா?