நியூயார்க் நகரில் உள்ள செப்டம்பர் 11 நினைவுச் சின்னத்திற்கு ஒருமுறை சென்றிருந்தபோது, அங்கே இருக்கும் இரட்டை பிரதிபலிப்புக் குளங்களில் ஒன்றை ஒளிப்படம் எடுத்தேன். உலக வர்த்தக மையத் தாக்குதலில் உயிரிழந்த சுமார் 3,000 மக்களின் பெயர்கள், இந்த குளங்களைச் சுற்றி உள்ள வெண்கலத் தகடுகளில் பொறிக்கப்பட்டுள்ளன. பின்பு அந்தப் படங்களை கவனமாகப் பார்த்தபோது, ஒரு பெயரின்மேல் ஒரு பெண்ணின் கை இருப்பதைப் பார்த்தேன். தங்களுக்கு அருமையானவர்கள் பெயரின்மேல் கை வைத்து, நினைவுகூருவதற்காக அநேகர் அந்த இடத்திற்கு வருகிறார்கள்.

கர்த்தரை விட்டு அவரின் ஜனம் பின்வாங்கியபோதும், இயேசு கிறுஸ்துவின்மாறாத அன்பையும், அவர்கள்மீது அவர் வைத்திருக்கும் கரிசனையையும் ஏசாயா அவர்களுக்கு நினைவுபடுத்தினார். பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப்பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன் (ஏசாயா 43:1) என்று கர்த்தர் சொல்லுகிறார்.

சங்கீதம் 23ல், “நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்….என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்” (வச. 4,6) என்று தாவீது கூறுகிறார்.

கர்த்தர் நம்மை ஒருபோதும் மறப்பதில்லை. நாம் எங்கிருந்தாலும், எந்த சூழ்நிலையில் இருந்தாலும், அவருக்கு நம் பெயர் தெரியும்; அவரது மாறாத அன்பினால், நம்மை அவரது கரத்தின் பிடியில் வைத்துள்ளார்.