பனிக்காலத்தின் கடுங்குளிர் நாள் அது. கதகதப்பான என் வாகனத்தில் இருந்து, ஒரு கதகதப்பான கட்டடத்துக்குள் எப்படிச் செல்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் அடுத்த நிமிடம், என் முழங்கால்கள் ஒன்றை ஒன்று உரசிக்கொண்டு, பாதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பக்கமாக நகர்ந்துதரையில் விழுந்தேன். எலும்பு முறிவு எதுவும் இல்லை என்றாலும், அதிக வலியை உணர்ந்தேன். நேரம் ஆக ஆக வலி அதிகரித்தது. நான் முற்றிலும் குணம்பெற பல வாரங்கள் ஆனது.

இதுவரை கீழே விழுந்ததில்லை என்று யாராலும் சொல்லமுடியாது. யாரோ அல்லது ஏதோ ஒன்று  நாம் கீழே விழாமல் பார்த்துக்கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்? சரீரப் பிரகாரமாக, நாம் விழாமல் இருக்க எந்த உத்தரவாதமும் இல்லை என்றாலும், நம் வாழ்க்கையில் கிறிஸ்துவை கனப்படுத்த நாம் எடுக்கும் முயற்சியில் நமக்கு உதவ தயாராகக் காத்திருப்பதோடு, நமது மறுமை வாழ்வில் அவரது பிரசன்னத்தில் சந்தோஷமாக நிற்க தயார்படுத்தவும் ஒருவர் இருக்கிறார்.

நம்மை திசைதிருப்பும், குழப்பும், சிக்கவைக்கும் பல சபலங்களை (தவறான போதனைகளையும்கூட) நாம் தினமும் எதிர்கொள்ளுகிறோம். ஆனால் இந்த உலகத்தில் நாம் நம் வழிகளில் உறுதியாக இருப்பதற்கு நம் சொந்த முயற்சிகள் மட்டும் காரணம் கிடையாது. நாம் கோபமாகப் பேசக்கூடிய சந்தர்ப்பங்களில் அமைதி காக்கவும், ஏமாற்றக்கூடிய சந்தர்ப்பங்களில் நேர்மையாக நடக்கவும், வெறுப்புக்குப் பதிலாக அன்பைத் தேர்ந்தெடுக்கவும், தவறுக்குப் பதிலாக உண்மையைத் தேர்ந்தெடுக்கவும் கர்த்தரின் வல்லமையே நம்மைத் தாங்குகிறது என்பது எவ்வளவு நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது (யூதா 1:24). கிறிஸ்து மீண்டும் வரும்போது, கர்த்தரின்அங்கீகரிப்பைப் பெற்று அவர்முன் நாம் நிற்கும்போது, அவரது நிலையான கிருபைக்காக நாம் இப்போது ஏறெடுக்கும் ஸ்தோத்திரம், நித்திய காலமாக எதிரொலிக்கும் (வச. 25).