பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்ற தன்னுடைய வீட்டின் முன்னறை இறங்கிக் கொண்டிருக்கின்றது, சுவரில் வெடிப்புகள் தோன்றியுள்ளன, அவ்வறையின் ஜன்னல் திறக்க முடியாததாகிவிட்டது என என்னுடைய நண்பன் கூறினான். இந்த அறை அஸ்திபாரமிடாமல் சேர்க்கப்பட்ட அறையென பின்னர் தெரிந்துகொண்டோம். இந்த கீழ்த்தரமான வேலையை சரி செய்வதற்கு, கட்டுமானர் பல மாதங்கள் வேலை செய்து ஒரு புதிய அஸ்திபாரத்தைப் போட்டார்.
அவர்கள் அந்த வேலையை முடித்த பின்னர், நான் அதைப் பார்வையிட்ட போது சுவரிலிருந்த வெடிப்பு மறைந்து, ஜன்னல் திறக்கக்கூடியதாக இருந்தது. மற்றபடி எந்த ஒரு மாறுபாட்டையும் நான் அதில் காண முடியவில்லை. ஆனால், ஓர் உறுதியான அஸ்திபாரம் போடப்பட்டுள்ளது என்பதை உணர முடிந்தது.
இந்த உண்மை நம் வாழ்க்கைக்கும் பொருத்தமானது.
இயேசு தன்னுடைய உபதேசத்திற்குச் செவி கொடுக்காததின் விளைவை விளக்க, ஒரு புத்திசாலியும் ஒரு முட்டாளும் ஆகிய இரு கட்டுமானர்களைப் பற்றிய உவமையைச் சொல்கின்றார் (லூக். 6:46-49). இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு அதை அப்படியே விட்டு விடுகிறவர்களைப் போலல்லாமல், இயேசுவின் வார்த்தைகளுக்குச் செவி கொடுத்துக் கீழ்ப்படிகிறவன் கற்பாறையின் மேல் தன் வீட்டைக் கட்டின மனிதனுக்கு ஒப்பாயிருக்கிறான். புயல் காற்று வீசிய பொதும் அந்த வீட்டை அசைக்கக் கூடாமற் போயிற்று. அப்படியே அவர்களுடைய விசுவாசமும் எந்நிலையிலும் அசைக்கப்படுவதில்லை.
இயேசுவின் வார்த்தைகளை கவனித்து, கீழ்படிந்தால் மெய்யான சமாதானத்தைப் பெற்றுக் கொள்வோம். அவர் நம் வாழ்விற்கு ஓர் உறுதியான அஸ்திபாரமாயிருக்கிறார். வேத வசனங்களை வாசிப்பதன் மூலமும், ஜெபத்தின் வழியாகவும், பிற கிறிஸ்தவர்களிடமிருந்து கற்றுக் கொள்வதன் மூலமாயும் அவர் மீதுள்ள நமது அன்பை உறுதிப்படுத்துவோம். பெருவெள்ளம் போல நீரோட்டம் நம் வீட்டின் மீது மோதினாலும், நாம் காட்டிக் கொடுக்கப்படுவதாலோ, வேதனையாலோ அல்லது ஏமாற்றத்தாலோ எதுவாயினும் நம்முடைய உறுதியான அஸ்திபாரத்தை அசைக்க முடியாது என்ற நம்பிக்கையோடிருப்போம். நமது இரட்சகர் நமக்குத் தேவையான ஆதரவைத் தருவார்.
இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு நாம் கீழ்படியும் பொது, தேவன் நம் வாழ்விற்கு உறுதியான அஸ்திபாரமாயிருப்பார்.