நான் வாலிபனாக இருந்த போது, என்னுடைய தாயார் நான் விசுவாசத்தில் வளர வேண்டுமென என்னை ஊக்கப்படுத்துவார்கள். “தேவனை நம்பு, அவர் உன்னைக் கவனித்துக் கொள்வார்” என என்னுடைய தாயார் சொல்வதுண்டு. “அது அத்தனை எளிதானதல்ல, அம்மா!” என நான் கத்துவேன். “முயற்சி செய்பவர்களுக்குத்தான் தேவன் உதவுவார்” என்பேன்.
ஆனால், “முயற்சி செய்பவர்களுக்குத்தான் தேவன் உதவுவார்” என்று வேதாகமத்தில் எங்குமே காணப்படவில்லை. நம்முடைய அனுதின தேவைகளுக்கும் தேவனையே சார்ந்து வாழும்படி தேவனுடைய வார்த்தைகள் சொல்கின்றன. “ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப் பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை; அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார். அவைகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களல்லவா? (மத். 6:26-27) என இயேசு சொல்கின்றார்.
நாம் அநுபவிக்கின்ற யாவும், நம் வாழ்க்கையில் சம்பாதிப்பதற்குத் தேவையான பெலனும், நம்முடைய முயற்சிகள் யாவும் நம்மை நேசித்து, நம்முடைய தகுதிக்கும் மேலாக நம்மை கனப்படுத்துகின்ற நம்முடைய பரலோகத் தந்தையின் கொடைகளாகும்.
என்னுடைய தாயார் தங்களுடைய வாழ்வின் இறுதியையடைந்த போது ‘அல்சைமர்’ என்ற நோயால் தாக்கப்பட்டு தன்னுடைய நியாபகச்சக்தியையும், சிந்திக்கிற திறனையும் இழந்தார்கள். ஆனால் தேவன் மீது வைத்திருந்த நம்பிக்கைமட்டும் குறையவில்லை. அவர்கள் எங்கள் வீட்டிலிருந்த நாட்களில், தேவன் அவர்களுடைய தேவைகளையெல்லாம் எதிர்பாராத விதமாகச் சந்தித்ததையும், அதனால் அவள் வாழ்க்கையில் கொண்டிருந்த நம்பிக்கை சரியானதே என்பதைக் காணும் சந்தர்ப்பம் பெற்றேன். கவலைப்படுவதற்குப் பதிலாக அவர் தன்னை தேவனுடைய பாதுகாப்பில் வைத்துவிட்டார். தேவன் அவர்களுக்கு உண்மையுள்ளவராகவே இருந்தார்.
நாளைய தினத்தைக் குறித்து கவலைப் படாதே. தேவன் ஏற்கனவே அங்கிருக்கின்றார்.